சில வருடங்களுக்கு முன்பு நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பணிபுரிந்த திருநெல்வேலியை சேர்ந்த சக ஊழியர் ஒருவர் கிண்டலாக சொல்வார் எதற்கெடுத்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் சமூக பார்வை, வரலாற்று பார்வை, பொருளாதார பார்வை, ஆன்மீக பார்வை என்று நீட்டி முழக்கி அயற்ச்சி அடைய வைக்கிறீர்களே, உங்களுக்கு இதெல்லாம் எதற்கு? சிலருக்கு புரியாது, சிலருக்கு பிடிக்காது, இந்தியர்கள், அதுவும் தமிழர்களுக்கு சினிமாவை தவிர வேறு எதையும் விவாதிக்கவே பிடிக்காதே, உங்கள் விளக்கமெல்லாம் வீண் தானே என்பார்.
நான் அப்போதெல்லாம் யோசித்து பார்ப்பதுண்டு, ஏன் தமிழர்கள் ஆழமான சிந்தனைகளிலோ, விவதங்களிலோ ஆர்வமற்ற சமூகமாக இருக்கிறோமென்று. இது தமிழர்களிடம் ஒரு சமூக நோய் போலவே பீடித்திருக்கிறது. எங்கும் எதிலும் ஆழமான, சமநிலையான புரிதல்களே பெரும்பாலும் இல்லை. மேம்போக்கான புரிதல்கள், பேச்சுகள், அவதூறான பேச்சுகளை நகைச்சுவை என்று நினைத்துக்கொள்வது, இவையே தமிழர்களின் பெரும்பாலான கருத்து பரிமாற்றங்கள் நிகழும் களங்கள். இதை மீறி பேசினால் ஆன்மீகம் அதுவும் எந்த நீண்ட வாசிப்பும் அற்ற தப்பும் தவறுமான புரிதல்கள் அதையே ஆன்மீகம் என்று நினைக்கும் போக்கு இவையே தமிழர்களின் விவாத வட்டம். இப்படியான ஒரு சமுதாயம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சிந்தனையின் பங்களிப்பாக என்ன கொடுக்கபோகிறது என்பது வெட்கி தலைகுனிய வைக்கிறது.
ஒரு முறை தமிழகத்தின் மிக பெரிய பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பேராசிரியரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெரும் ஆர்வத்தோடு அவருடன் பேச ஆரம்பித்தேன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சான் பால் சார்ட்ரே, அயன்ராண்ட் பற்றியெல்லாம் பேசுவார் என்று நினைத்தேன், ஆனால், பெரிய ஏமாற்றம். அவருக்கு பாடத்திட்டத்தினை தாண்டி எதுவுமே தெரியவில்லை. பேச்சு வரலாறு பக்கம் திரும்பியது, அவர் ஒரு முறை கம்போடியா சென்றாராம், அப்போது அங்கே ஆங்கோர்வாட் கேயிலை கண்டாராம், அது சூர்யவர்மன் எனும் சோழ மண்ணன் கட்டியதாம். (அவன் ஓர் கைமர் இன மண்ணன்) தலையில் அடித்து கொள்ளலாம் போலிருந்தது, பேஸ்புக், வாட்ஸ்ஆப் சரித்திரவியலாளர்கள் அடித்து விடும் “தமிழன்டா” ரக சரித்திர புரிதல். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் சிந்தனையை மழுங்க செய்யும் சிறந்த சேவையை செய்கின்றன. இவற்றிலிருந்து வரும் மாணவர்கள் அச்சடித்த சோற்று பிண்டங்கள் போல், அந்த வடிவத்திலிருந்து விடுபடாமல் வளர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு நுட்பமான, ஆழமான சிந்தனைகள் எல்லாம் பல காத தூரம்.
குழந்தை பருவத்திலிருந்து, நல் எண்ணங்களை விதைப்பதை விட, படித்தால், நிறைய சம்பாதிக்கலாம், சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம் என்ற ஒற்றை பிம்ப எண்ணத்தை ஆழமாக விதைத்துவிடுகின்றனர். இது குழந்தைகளை ஒரு வகையான சுயநல சிந்தனைகளுடன் வளர வழிவகுக்கிறது. சமூக அக்கறை, மனிதர்கள் மீதான அன்பு, இயற்கையின் பேரன்பு எதுவுமே முக்கியமல்ல என வளர்ந்து வரும் இத்தகைய குழந்தைகள் பின்னாளில் எந்த ஒரு சமூக கொடுமைகளை பற்றி விவாதித்தாலும் கூட சலிப்பு கொள்கின்றனர். இன்னும் சிலர், ஏதோ நாமும் இருக்கிறோம் என்பதற்காக எதாவது உளறிவிட்டு பின் அதை ஒரு முட்டாள் விவாதமாக கருதுகின்றனர்.
இந்திய-தமிழக கல்வி முறைகள் ஆழமான சிந்தனைகளுக்கு தேவையான தொடர் வாசிப்பு, நீள் வாசிப்பு ஆகியவற்றை முதன்மைபடுத்துவதில்லை. பெரும் வாசிப்புக்கென்று ஒரு பொறுமை வேண்டும், அவற்றுக்காக பயிற்றுவிக்க வேண்டும், அது மிக பெரிய உழைப்பை கோருவது. அதே போல் விவாதங்களுக்கும் என்று ஒரு முறைமை, பயிற்சி அவசியம், நம் கல்வி முறை அவற்றை அளிப்பதில்லை. பெரும்பாலான தமிழர்களால், குறிப்பாக சோற்றுக்கு அலைய அவசியமில்லாத பெரிய பட்டங்கள் வாங்கி அவற்றின் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவான சம்பளம் கிடைக்கும் வேலைகளில் உள்ள மக்கள் அனேகமாக எவருக்குமே வாசிப்பு என்பதே கிடையாது, அவர்களுக்கு சம்பாதிப்பது மட்டுமே கடமை என்று பயிற்றுவிக்கபட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்வதில்லை, இயற்கையை ரசிக்க அவர்களுக்கு தெரியாது, இயற்கையின் பேர் உருவத்தை பேரன்பை புரிந்து கொள்ள இயலாதவர்கள். பலருக்கும் பொழுதுபோக்கு என்பதே சினிமா-டிவி தான்.அவ்வளவு ஏன் பெரும்பாலான தமிழர்களுக்கு சினிமா இசையை தாண்டி நல்ல இசையை ரசிக்க கூட பயிற்சி கிடையாது. நல்ல இசை உருவாக்கும் மனநிலை ஓர் அரூபமான உன்னத நிலையை தரும், அத்தகைய அனுபவங்களை உணர தெரியாதவர்கள். ஒரு ஊரை சுற்றிபார்த்தார்கள் என்றால் கூட, அந்த ஊரோ, அங்கு நிலவும் சூழ்நிலையோ அவர்களுக்கு எவ்வாறான மனநிலையை அளிக்கிறது என்று கோர்வையாக கூட சொல்ல தெரியாது. இவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். நம் கல்வி முறை, சமூக அமைப்பு ஈ அடிச்சான காப்பிகளை உருவாக்குகிறது. ஒரு வேலை, இப்படி உப்புசப்பில்லாத இவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் அதிர்ச்சிக்கு ஆட்பட்டாலோ, வெறுமை உணர்ந்து வாழ்கை என்பது என்ன எனும் கேள்வி வாழ்கையின் நடுத்தர வயதில் வந்தாலோ பதில் தெரியாமல் இவர்களில் சிலர் சென்று சேரும் இடம் ஆன்மீகம், முன்னாட்களில் கோயில் குளம் ஜோசியம் என்று அழைந்திருப்பார்கள், இப்போது அந்த இடத்தை கார்ப்பரேட் சாமியார் மடங்கள் பிடித்துக்கொண்டன.
கார்ப்பரேட் சாமியார் மடங்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரு புத்தகமே போடலாம். இந்தியாவில் தாராளமயமாக்களுக்கு பின் வளர்ந்த இவ்வாறான மேல் மத்தியதர வகுப்பு மக்களே கார்ப்பரேட் சாமியார்களின் மூலதனம். இவர்களின் இளமை காலம் முதல் இவர்களுக்கு சொல்லப்பட்டது ஒன்றே எப்போதும் முன்னேறி கொண்டே இரு, அது மட்டுமே போதும். தாராளமயமாக்களுக்கு பிறகு வந்த பொருளாதார ஏற்ற நிலை இவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்தியது. முன்னால் தலைமுறைகள் நினைத்து பார்க்க முடியாத பொருளாதார நிலையில் முன்னேறியதே வாழ்க்கையின் வெற்றியாக கருதப்பட்டது. ஆனால், வாழ்க்கையின் வெறுமை முகத்தில் அறையும் போது எழும் வினாக்களுக்கு பதில் கிடைக்காமல் திணறும் போது இவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கும் பாதையே கார்ப்பரேட் ஆன்மீகம், இவர்களுக்கு பெரும்பாலும் இனிமையான மேல்தட்டு ஆங்கிலத்தில் ஆங்காங்கே இந்து மத தத்துவங்கள், புரிதல் இல்லாத வரலாற்று விளக்கங்கள், அறிவியல் அற்ற அறிவியல் போன்ற தகவல்கள் என்று தூவி, இரண்டு சொட்டு சமஸ்கிருத வார்த்தை ஜால நெய் விட்டு கொடுக்கப்படும் ஆன்மீக ஊத்தப்பம் வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டதாக ஒரு மமதையை கொடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் எந்த சமூக, வரலாற்று, பொருளாதார நோக்குகளில் ஏன் உண்மையான ஆன்மீக நோக்கில் கூட ஒரு விஷயத்தை அணுக தெரியாது. ஆகையால் இவர்களுக்கு எந்த பொது விவாதமும் இவர்களின் கார்ப்பரேட் சாமியார் சுட்டு தரும் தோசையில் மட்டுமே விளங்கும், அதுவும் சாமியார் என்ன சார்பு நிலை எடுக்கிறாரோ அதை பொருத்து.
இப்படியாக வளர்ந்து வந்த நம்
தலைமுறைக்கு தர்க்கம் என்பதன் அர்த்தம் கூட தெரியாது. நம்மில் பலருக்கு பெரும்போக்கான சிந்தனையே வாய்ப்பதில்லை, வாய்த்தாலும் சிந்தனை ஓட்டங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில்லை காரணம் வாசிப்பு பயிற்சி கிடையாது, வாழ்க்கையை வெளியிலிருந்து அனுமானிக்கும் நோக்கும் கிடையாது, இவர்களில் சிலருக்கு வெற்று கேளிக்கை களியாட்டங்கள் மட்டுமே உவகையை அளிக்க கூடியவை, இதனாலேயே எந்த ஆழமான, பரந்துப்பட்ட விவாதங்களையும், சிந்தனைகளையும் புரிந்து கொள்ள கூடிய முடியாது. இருந்தாலும், இவர்களில் சிலரேனும் ஏதேனும் வாசிப்புகளின் வழியோ, வாழ்க்கை அனுபவங்களின் வழியோ ஆழமான, நுட்பமான சிந்தனையோட்டங்களின் தாக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்ற பேர் ஆவலோடு தான் அதிகமான விளக்கங்களை கொடுத்து இத்தகைய விவாதங்களை என்னை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் தொடர்ந்து ஆரம்பிக்கின்றேன். கோவணம் மட்டுமே கட்டும் ஊரில் வேட்டி கட்டிய கிறுக்கனாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக