வெள்ளி, 30 நவம்பர், 2018

நாம் ஏன் ஆழமான விவாதங்களை விரும்புவதில்லை?

சில வருடங்களுக்கு முன்பு நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பணிபுரிந்த திருநெல்வேலியை சேர்ந்த சக ஊழியர் ஒருவர் கிண்டலாக சொல்வார் எதற்கெடுத்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் சமூக பார்வை, வரலாற்று பார்வை, பொருளாதார பார்வை, ஆன்மீக பார்வை என்று நீட்டி முழக்கி அயற்ச்சி அடைய வைக்கிறீர்களே, உங்களுக்கு இதெல்லாம் எதற்கு? சிலருக்கு புரியாது, சிலருக்கு பிடிக்காது, இந்தியர்கள், அதுவும் தமிழர்களுக்கு சினிமாவை தவிர வேறு எதையும் விவாதிக்கவே பிடிக்காதே, உங்கள் விளக்கமெல்லாம் வீண் தானே என்பார்

நான் அப்போதெல்லாம் யோசித்து பார்ப்பதுண்டு, ஏன் தமிழர்கள் ஆழமான சிந்தனைகளிலோ, விவதங்களிலோ ஆர்வமற்ற சமூகமாக இருக்கிறோமென்று. இது தமிழர்களிடம் ஒரு  சமூக நோய் போலவே பீடித்திருக்கிறது. எங்கும் எதிலும் ஆழமான, சமநிலையான புரிதல்களே பெரும்பாலும் இல்லை. மேம்போக்கான புரிதல்கள், பேச்சுகள், அவதூறான பேச்சுகளை நகைச்சுவை என்று நினைத்துக்கொள்வது, இவையே தமிழர்களின் பெரும்பாலான கருத்து பரிமாற்றங்கள் நிகழும் களங்கள். இதை மீறி பேசினால் ஆன்மீகம் அதுவும் எந்த நீண்ட வாசிப்பும் அற்ற தப்பும் தவறுமான புரிதல்கள் அதையே ஆன்மீகம் என்று நினைக்கும் போக்கு இவையே தமிழர்களின் விவாத வட்டம். இப்படியான ஒரு சமுதாயம் மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான சிந்தனையின் பங்களிப்பாக என்ன கொடுக்கபோகிறது என்பது வெட்கி தலைகுனிய வைக்கிறது.

ஒரு முறை தமிழகத்தின் மிக பெரிய பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் பேராசிரியரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பெரும் ஆர்வத்தோடு அவருடன் பேச ஆரம்பித்தேன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சான் பால் சார்ட்ரே, அயன்ராண்ட் பற்றியெல்லாம் பேசுவார் என்று நினைத்தேன், ஆனால், பெரிய ஏமாற்றம். அவருக்கு பாடத்திட்டத்தினை தாண்டி எதுவுமே தெரியவில்லை. பேச்சு வரலாறு பக்கம் திரும்பியது, அவர் ஒரு முறை கம்போடியா சென்றாராம், அப்போது அங்கே ஆங்கோர்வாட் கேயிலை கண்டாராம், அது சூர்யவர்மன் எனும் சோழ மண்ணன் கட்டியதாம். (அவன் ஓர் கைமர் இன மண்ணன்) தலையில் அடித்து கொள்ளலாம் போலிருந்தது, பேஸ்புக், வாட்ஸ்ஆப் சரித்திரவியலாளர்கள் அடித்து விடும்தமிழன்டாரக சரித்திர புரிதல். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள் சிந்தனையை மழுங்க செய்யும் சிறந்த சேவையை செய்கின்றன. இவற்றிலிருந்து வரும் மாணவர்கள் அச்சடித்த சோற்று பிண்டங்கள் போல், அந்த வடிவத்திலிருந்து விடுபடாமல் வளர்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு நுட்பமான, ஆழமான சிந்தனைகள் எல்லாம் பல காத தூரம்.

குழந்தை பருவத்திலிருந்து, நல் எண்ணங்களை விதைப்பதை விட, படித்தால், நிறைய சம்பாதிக்கலாம், சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம் என்ற ஒற்றை பிம்ப எண்ணத்தை ஆழமாக விதைத்துவிடுகின்றனர். இது குழந்தைகளை ஒரு வகையான சுயநல சிந்தனைகளுடன் வளர வழிவகுக்கிறது. சமூக அக்கறை, மனிதர்கள் மீதான அன்பு, இயற்கையின் பேரன்பு எதுவுமே முக்கியமல்ல என வளர்ந்து வரும் இத்தகைய குழந்தைகள்  பின்னாளில் எந்த ஒரு சமூக கொடுமைகளை பற்றி விவாதித்தாலும் கூட சலிப்பு கொள்கின்றனர். இன்னும் சிலர், ஏதோ நாமும் இருக்கிறோம் என்பதற்காக எதாவது உளறிவிட்டு பின் அதை ஒரு முட்டாள் விவாதமாக கருதுகின்றனர்

இந்திய-தமிழக கல்வி முறைகள் ஆழமான சிந்தனைகளுக்கு தேவையான தொடர் வாசிப்பு, நீள் வாசிப்பு ஆகியவற்றை முதன்மைபடுத்துவதில்லை. பெரும் வாசிப்புக்கென்று ஒரு பொறுமை வேண்டும், அவற்றுக்காக பயிற்றுவிக்க வேண்டும், அது மிக பெரிய உழைப்பை கோருவது. அதே போல் விவாதங்களுக்கும் என்று ஒரு முறைமை, பயிற்சி அவசியம், நம் கல்வி முறை அவற்றை அளிப்பதில்லை. பெரும்பாலான தமிழர்களால், குறிப்பாக சோற்றுக்கு அலைய அவசியமில்லாத பெரிய பட்டங்கள் வாங்கி அவற்றின் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவான சம்பளம்  கிடைக்கும் வேலைகளில் உள்ள மக்கள் அனேகமாக எவருக்குமே வாசிப்பு என்பதே கிடையாது, அவர்களுக்கு சம்பாதிப்பது மட்டுமே கடமை என்று பயிற்றுவிக்கபட்டுள்ளது. அவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்வதில்லை, இயற்கையை ரசிக்க அவர்களுக்கு தெரியாது, இயற்கையின் பேர் உருவத்தை பேரன்பை புரிந்து கொள்ள இயலாதவர்கள். பலருக்கும் பொழுதுபோக்கு என்பதே சினிமா-டிவி தான்.அவ்வளவு ஏன் பெரும்பாலான தமிழர்களுக்கு சினிமா இசையை தாண்டி நல்ல இசையை ரசிக்க கூட பயிற்சி கிடையாது. நல்ல இசை உருவாக்கும் மனநிலை ஓர் அரூபமான உன்னத நிலையை தரும், அத்தகைய அனுபவங்களை உணர தெரியாதவர்கள். ஒரு ஊரை சுற்றிபார்த்தார்கள் என்றால் கூட, அந்த ஊரோ, அங்கு நிலவும் சூழ்நிலையோ அவர்களுக்கு எவ்வாறான மனநிலையை அளிக்கிறது என்று கோர்வையாக கூட சொல்ல தெரியாது. இவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். நம் கல்வி முறை, சமூக அமைப்பு அடிச்சான காப்பிகளை உருவாக்குகிறது. ஒரு வேலை, இப்படி உப்புசப்பில்லாத இவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் அதிர்ச்சிக்கு ஆட்பட்டாலோ, வெறுமை உணர்ந்து வாழ்கை என்பது என்ன எனும் கேள்வி வாழ்கையின் நடுத்தர வயதில் வந்தாலோ பதில் தெரியாமல் இவர்களில் சிலர் சென்று சேரும் இடம் ஆன்மீகம், முன்னாட்களில் கோயில் குளம் ஜோசியம் என்று அழைந்திருப்பார்கள், இப்போது அந்த இடத்தை கார்ப்பரேட் சாமியார் மடங்கள் பிடித்துக்கொண்டன.

கார்ப்பரேட் சாமியார் மடங்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரு புத்தகமே போடலாம். இந்தியாவில் தாராளமயமாக்களுக்கு பின் வளர்ந்த இவ்வாறான மேல் மத்தியதர வகுப்பு மக்களே கார்ப்பரேட் சாமியார்களின் மூலதனம். இவர்களின் இளமை காலம் முதல் இவர்களுக்கு சொல்லப்பட்டது ஒன்றே எப்போதும் முன்னேறி கொண்டே இரு, அது மட்டுமே போதும். தாராளமயமாக்களுக்கு பிறகு வந்த பொருளாதார ஏற்ற நிலை இவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்தியது. முன்னால் தலைமுறைகள் நினைத்து பார்க்க முடியாத பொருளாதார நிலையில் முன்னேறியதே வாழ்க்கையின் வெற்றியாக கருதப்பட்டது. ஆனால், வாழ்க்கையின் வெறுமை முகத்தில் அறையும் போது எழும் வினாக்களுக்கு பதில் கிடைக்காமல் திணறும் போது இவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கும் பாதையே கார்ப்பரேட் ஆன்மீகம், இவர்களுக்கு பெரும்பாலும் இனிமையான மேல்தட்டு ஆங்கிலத்தில் ஆங்காங்கே இந்து மத தத்துவங்கள், புரிதல் இல்லாத வரலாற்று விளக்கங்கள், அறிவியல் அற்ற அறிவியல் போன்ற தகவல்கள் என்று  தூவி, இரண்டு சொட்டு சமஸ்கிருத வார்த்தை ஜால நெய் விட்டு கொடுக்கப்படும் ஆன்மீக ஊத்தப்பம் வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டதாக ஒரு மமதையை கொடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் எந்த சமூக, வரலாற்று, பொருளாதார நோக்குகளில்  ஏன் உண்மையான ஆன்மீக நோக்கில் கூட ஒரு விஷயத்தை அணுக தெரியாது. ஆகையால் இவர்களுக்கு எந்த பொது விவாதமும் இவர்களின் கார்ப்பரேட் சாமியார் சுட்டு தரும் தோசையில் மட்டுமே விளங்கும், அதுவும் சாமியார் என்ன சார்பு நிலை எடுக்கிறாரோ அதை பொருத்து

இப்படியாக வளர்ந்து வந்த நம்
தலைமுறைக்கு தர்க்கம் என்பதன் அர்த்தம் கூட தெரியாது. நம்மில் பலருக்கு பெரும்போக்கான சிந்தனையே வாய்ப்பதில்லை, வாய்த்தாலும் சிந்தனை ஓட்டங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில்லை காரணம் வாசிப்பு பயிற்சி கிடையாது, வாழ்க்கையை வெளியிலிருந்து அனுமானிக்கும் நோக்கும் கிடையாது, இவர்களில் சிலருக்கு வெற்று கேளிக்கை களியாட்டங்கள் மட்டுமே உவகையை அளிக்க கூடியவை, இதனாலேயே எந்த ஆழமான, பரந்துப்பட்ட விவாதங்களையும், சிந்தனைகளையும் புரிந்து கொள்ள கூடிய முடியாது. இருந்தாலும், இவர்களில் சிலரேனும் ஏதேனும் வாசிப்புகளின் வழியோ, வாழ்க்கை அனுபவங்களின் வழியோ ஆழமான, நுட்பமான சிந்தனையோட்டங்களின் தாக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்ற பேர் ஆவலோடு தான் அதிகமான விளக்கங்களை கொடுத்து இத்தகைய விவாதங்களை என்னை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் தொடர்ந்து ஆரம்பிக்கின்றேன். கோவணம் மட்டுமே கட்டும் ஊரில் வேட்டி கட்டிய கிறுக்கனாக!


சனி, 19 மே, 2018

அடுத்த வருடம் யெருசலேமிலே!

ஆப்ரேஷன் ஜெயசூரியா, சிங்கள ராணுவம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது, ஆனையிறவு வீழ்ந்தது, யாழ் குடாநாடு சிங்கள ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது இப்படியான நாளிதழ் செய்திகளில் தினமும் காலை தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு பெரியப்பா வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுவிடுவேன், காலையிலேயே பெரியப்பா பேப்பரை படித்து முடித்ததற்கு அறிகுறியாக இரண்டாக மடித்து ஃபோன் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும், காலையில் பார்த்த அந்த தலைப்பு செய்திகளை சாய்ங்காலம் வந்ததும் அங்குலம் விடாமல் படித்துவிடுவேன். பெரியப்பா மிக பெரிய ஈழ ஆதரவாளர், புலிகளின் ஆளுமையை சிலாகித்து பேச கூடியவர், அப்போது புலிகள் பெரும் பின்னடைவில் இருந்தனர், ஆனால் பெரியப்பாவின் முகத்தில் சிறு சஞ்சலம் கூட தெரியாது காரணம் அவர் ஈழத்தமிழரின் திறனில் அபார நம்பிக்கை கொண்டவர். ஒரு நாள் 
சாயங்காலம் புலவர் ஒருவர்  பெரியப்பாவை பார்க்க வந்தார், அவர் தமிழ் தேசிய உணர்வாளர், போரை பற்றிய பேச்சு வந்தது, அங்க சூழ்நிலை ரொம்ப மோசமாகிட்டே வருதுங்க, நாம இங்கேருந்து ஏதாவது செய்யனும்னு பாக்குறோம் என்று சொன்னார். ஒன்பதாவது படித்து கொண்டிருந்த சிறுவனான நான் இதையெல்லாம் ஓரமாக உட்கார்ந்து கேட்டுகொண்டிருந்தேன். அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க, பாருங்க நம்மாளுங்க திருப்பி அடிப்பாய்ங்க என்று பெரியப்பா மறுத்து சொன்னார்.

பெரியப்பா சொன்னது போலவே, புலிகள் ஆப்ரேஷன் ஓயாத அலைகள் சமரில் அடித்து நொறுக்கினர், வீழ்ந்த இடங்கள் பலவும் ஆனையிறவு உட்பட மீண்டும் தமிழர் வசம் வந்தது. பெரியப்பாவிடமிருந்து சிறிது சிறிதாக தெரிந்து கொண்ட விஷயங்களே பின்னாளில் ஈழ போராட்டத்தை பற்றிய முழு சித்திரத்தை படித்து தெரிந்து கொள்ள உந்தியது
இத்தனைக்கும் பெரியப்பா பெரிதாக எதையுமே 
வெளிக்காட்டி கொள்ளாதவர், அங்கே இங்கே என எப்போதாவது சொல்வது தான். ஆர்வத்தோடு தேடி படித்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. பெரியப்பாவோடு தமிழ் தேசியம் பேசிய சிலர் கொண்டுவந்து கொடுத்த பத்திரிக்கைகள் சில சமயம் மேஜை மீதிருக்கும், அதை அவ்வப்போது அவருக்கு தெரியாமல் எடுத்து வாசித்ததன் விளைவே எனக்கு தமிழ் தேசியத்தின் மீதான ஈடுபாட்டினை அதிகரித்தது

பெரியப்பா கல்லூரி காலங்களில் அன்றைய இடதுசாரி - திராவிட புரட்சிகர கருத்தியல்களின் ஊடே தன் அரசியல் சார்பினை வளர்த்துக்கொண்டவர். 1950-60களில் உண்டாகிய உலகளாவிய லட்சியவாத சிந்தனையோட்டங்களின் தாக்கம் அவரின் இறுதிகாலம் வரை இருந்தது. அவரது இளமை காலத்தில் திமுக தலைவர்கள் லட்சியவாத முனைப்பு கொண்ட அவரை போன்ற தமிழ் இளைஞர்களின் ஆதர்சம். அதனால் அவருக்கு திமுகவின் மீதும், கலைஞரின் மீதும் இயல்பாகவே ஒரு மதிப்பிருந்தது

மே 18, 2009  மதிய நேரம் தம்பி தினேஷும், பெரியப்பாவும் தொலைக்காட்சி செய்திகளில் ஈழ இறுதி போரின் கோரத்தினை பார்த்தனராம், அந்த நிமிடங்களில் பெரியப்பாவின் மனதில் என்ன தோன்றியிருக்குமோ தெரியாது. ஆனால் ஈழ இறுதி யுத்ததிற்கு பின் கலைஞரின் மீதும் திமுகாவின் மீதும் அவருக்கு இருந்த நம்பிக்கை சுத்தமாக உடைந்தது என்பது நான் அவரிடம் அதை பற்றி விசாரித்த போது புரிந்துக்கொண்டேன். பெரியப்பா போன வருடம் மரித்தார், இந்த வருடம் மே 18 நினைவு நாளில் தமிழீழமும் தமிழர் இனவழிப்பும் எவ்வளவுக்கு நினைவு வருகிறதோ அவ்வளவுக்கு பெரியப்பாவும் நினைவுக்கு வருகிறார். எனது தமிழுனர்வுக்கு முழுக்காரணமும் பெரியப்பாவின் சிந்தனைகளின் தாக்கமே. எனது பெரியப்பா போன்ற மாமனிதர்கள் தமிழீழம் எப்படியும் அமைந்து விடும் என்று பேர் அவா கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் ஈழம் ஒன்றும் எமது ஊரல்ல, ஆனால் அது எமது இனத்தவரின் ஊர், எம் மக்களின் ஊர் எனும் உணர்வு. அவர்களின் கண்முன்னே பொசுங்கிய கனவு, எப்படி ஒரு பதைபதைப்பு இருந்திருக்கும். பெரியப்பா அடிக்கடி யூதர்களை பற்றி குறிப்பிடுவார், ஃஸயோன் இயக்கம், தியோடர் ஹெர்சல், இரண்டாயிரம் வருட கனவு, ஒவ்வொரு வருடமும் யோம்கிப்பூர் என்ற (யூதர்கள் ஜெருசலேத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட சோக நினைவு நாள்) நிகழ்வின் போது தாம் என்றாவது ஒரு நாள் மீண்டும் ஜெருசலேம் செல்வோம் என்று கருத்துள்ளஅடுத்த வருடம் ஜெருசலேமிலே!” பாடலை பாடி தம் அடுத்த சந்ததிகளுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தனராம் இரண்டாயிரம் வருடங்களாக, அதன் பின்னால் 1948ல் இஸ்ரேல் ஒரு தேசமாக உருவாகியது, என்று எத்தனையோ தகவல்கள் சாதாரண பேச்சிலேயே வந்து விழுந்தவை. உண்மையில் பெரியப்பா மற்றோர் இனத்தின் வீழ்ச்சியையும் எழுச்சியையும் சொல்லி சென்றிருக்கிறார். எம் பிள்ளைகளுக்கு அவர் எங்களுக்கு சொன்னது போன்றே சாதாரண பேச்சில் சொல்லி கொண்டிருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகளானாலும் மறக்க கூடாது என்பதற்காக, ஏதேனும் ஒரு வகையில் எதிர்கால சுதந்திர தமிழீழத்திற்காக எம் பெரியப்பாவின் பங்களிப்பும் (அவர் சிந்தனையின் தாக்கத்தினால் உருவான எங்களாலோ அல்லது எம் சந்ததிகளாலோ மிகச்சிறு அளவினேனும்) இருக்கும் என உளமார நம்புகிறேன்.

இனி வரும் எல்லா மே 18டும் ஈழ போராட்டத்தின் நினைவுகளோடு பெரியப்பா எனும் மாமனிதரின் நினைவுகளும் சேர்ந்தே இருக்கும்.

அடுத்த வருடம் யெருசலேமிலே... அடுத்த வருடம் யெருசலேமிலே...!!!”