செவ்வாய், 20 செப்டம்பர், 2016

A Memoir

இந்திராணி பெரியம்மாவ பத்தி நினைச்சாலே, A2/189 F தான் மொதல்ல நினைவுக்கு வரும். அம்மா வேலைக்கு போகும் போது எனக்கு உடம்பு சரியில்லனாலோ, ஸ்கூல் லீவுனாலோ என்ன கொண்டு போய் விடுற இடம் பெரியம்மா வீடு தான். பெரியம்மாவ பத்தி எப்போ பேசினாலும், அம்மா சொல்லுறது "இந்த காலத்துல யாருமே நினைச்சு கூட பாக்கமுடியாது, பெரியம்மா ஒரு சின்ன முக சுளிப்பு கூட இல்லாம புள்ளைங்கள பாத்துக்கும்"னு, பெரியம்மா என்னைய மட்டும் பாத்துக்கும்னு இல்ல, எனக்கு விவரம் தெரிஞ்சே A2/189F ல எத்தனையோ புள்ளைங்க வளர்ந்தாங்க.

வெயில் காலம் வந்தாலே லீவு விட்ட மொதோ சில நாள் பெரியம்மா வீடு தான் Vacation Home. மாலா அக்காவும், நானும் சேர்ந்து வெயில் கால மத்தியானத்துல, கொடுக்காப்புளி பறிக்க போவோம். மாடில புகைபோக்கி மேல ஏறி மாலா அக்கா தொரட்டிய வச்சு பறிக்க நான் கீழ உக்காந்து திங்கிறது தான் எப்போதும்  வழக்கம், அன்னைக்கும் அப்புடி தான், ஆனா திடீர்னு மாலா அக்காவுக்கு தலைசுத்தி கீழ விழ போய்டுச்சு, எதுக்கோ பெரியம்மா மேல வந்தது அலறியடுச்சுட்டு வந்து , மாலா அக்காவ மெதுவா கீழ உக்கார வச்சு புடிச்சு  இறக்குச்சு... இறங்குனதும் ரெண்டு பேருக்கும் செம திட்டு..... ஆனா நாமெல்லாம் வீர பரம்பரையில்லையா, அதுனால பெரியம்மாவுக்கு தெரியாம திரும்பவும் கொடுக்காப்புளி பறிக்க போனது வேற கதை! எவ்வளவுக்கு எவ்வளவு திட்டுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அப்பாவியாவும் இருக்கும், பெரியம்மா ஒரு முறை கோவிலுக்கு போயிட்டு வரும்போது, ஒரு hero பேணா கீழ கடந்துச்சுனு எடுத்துட்டு வந்துச்சு, அதுல சினிமால வர மாதிரி ஏதும் குண்டு வெச்சிருப்பாங்களோனு பயந்துட்டே எடுத்துட்டு வந்துச்சுன்னு கேட்டப்போ எல்லாரும் சிரி சிரின்னு சிரிச்சோம்....

பெரியம்மா வீட்டுல தான் மொதோ பிரிட்ஜ் வாங்குனாங்க, அதுல ஐஸ் வாட்டர் குடிக்கிறதுக்கு பெரிய போட்டியெல்லாம் நடந்திருக்கு. இப்போ எத்தனை விதமான பிரிட்ஜ் மாடல் பாத்தாலும், அந்த மெரூன் கலர் பிரிட்ஜும் தொறந்து தொறந்து மூடி பெரியம்மாகிட்ட திட்டு வாங்குனதும் போல சந்தோசமெல்லாம் வராது. நம்ம சொந்தக்காரங்கள்ல யார் டவுன்ஷிப் வந்தாலும் பெரியம்மா வீடு தான் மொதோ stop. அதுலயும் மங்களம் அம்மாச்சி கூட எப்ப பஸ்ல டவுன்ஷிப் வந்தாலும் மொதோ போறது A2/189 F, அப்பறம் தான் எங்க வீட்டுக்கு போவோம், ஒரு மே மாசம் ஒண்ணாதேதி மங்களம் அம்மாச்சி கூட திருவெறும்பூர்லேர்ந்து டவுன்ஷிப் வந்தப்போ, சரியான கோடை மழை, சினிமாவுல பாக்குற மாதிரி இருந்துச்சு, நடக்குறப்ப முன்னாடி எதுவும் தெரியாத அளவுக்கு மழை, அம்மாச்சி உங்க வீட்டுக்கு போக முடியாதுடா, இந்திராணி பெரியம்மா வீட்டுல தங்கிட்டு காலைல போலாம்னு சொல்லி, அங்க போனோம், "இந்த மழைல எப்புடிமா வந்த?"னு  பெரியம்மா அம்மாச்சிய கேட்டது என்னமோ இப்ப நடந்த மாதிரி இருக்கு.

அக்டோபர்-நவம்பர் மாச பின் பனிகாலம் ராத்திரி பத்து மணிக்கு மேல ஒரு மெல்லிசான குளிர் இருக்கும், அதுல காதி கடை கண்காட்சிக்கு போனது, அங்கேர்ந்து பெரியம்மா, சேகர்  அண்ணே, மாலா அக்கா கூட பேசிட்டே நடந்து போனது, டவுன்ஷிப் ஒண்ணாந்தேதி சந்தை, அதுக்கு எப்பவும் பெரியப்பா தான் வருவாங்க, ஒரு சமயம் மட்டும் பெரியம்மா கூட வந்துச்சு, அப்ப நானும், செடியும், பிரபுவும் வந்தது இதெல்லாம் கூட மனசுல இன்னைக்கும் இருக்கு, இங்க செப்டம்பர் மாச ராத்திரி இருக்க சன்னமான குளிர்ல எப்போ நடந்தாலும், இதெல்லாம் ஞாபகம் வரும்.

இந்திராணி பெரியம்மா வீடுனாலே இன்னொரு விஷயம் எல்லாருக்கும் ஞாபகம் வரும், டியூஷன் மாதிரி எல்லாரும் சாயங்காலம் உக்காந்து படிச்சது, சேகர் அண்ணே, சுதாகர் மாமா இவங்கெல்லாம் படிச்சப்ப நான் சின்ன பய, அதுனால ஒன்னும் புரியாம மாடில போய் பாத்துட்டு கீழ வந்திடுவேன்  , ஆனா நான் ஆறாவது படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து, பெரியம்மா வீட்டுக்கு சாய்ங்காலத்துக்கு மேல போக மாட்டேன், பெரியப்பாவ கண்டு ஒரு பயம் இருக்கும். இத்தனைக்கும் பெரியப்பா சாதாரணமா பேப்பர் படிச்சிட்டு இருப்பாங்க, அவ்வளவு தான்.
இருந்தாலும் பயம். செடி, பிரபு இவங்கெல்லாம் அப்போ தான் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க, சனி கிழமை மத்தியானம், மழை நாள் லீவு இதெல்லாம் நாங்க மாடில விளையாடுற நாள், அடுத்த மாடி தாண்டி போய் விளையாடுறது தான் பொழுது போக்கு. பெரியம்மா கொஞ்சம்படுத்து தூங்குங்களேன்டானு கேக்காத நாள் கிடையாது, இப்போ எவ்வளவு அசதியா இருந்தாலும் கொஞ்சம் தூங்கேண்டானு சொல்ல ஆளு கிடையாது...

ராஜ் டிவி பாலச்சந்தரின் கதை நேரம், டிவி நாடகங்களின் ஒரு மைல் கல்னு எங்கயோ படிச்சேன், பெரியம்மா வீட்டுல அது தான் எல்லாருக்கும் டிவி பாக்குற நேரம், எல்லாரும் அமைதியா உக்காந்து டிவி பாப்போம், அந்த வகைல கதை நேரம் எப்போதும் பெரியம்மா வீட்ட ஞாபகப்படுத்துற ஒரு விசயம். ராத்திரி சாப்பாடு அத ஒழுங்கோட கடைபிடிக்கிறதுங்குறது பெரியம்மாகிட்ட எல்லாரும் கத்துக்கவேண்டியது, சாப்பிடும்போது எதையும் ஒதுக்கி வீணாக்க கூடாது, பெரியம்மா சொல்லும் ஏன்டா அந்த வெங்காயம் தக்காளியை வீணாக்குற எல்லாத்தையும் சேத்து சாப்பிடுன்னு,  சாப்பிட்டுட்டு தட்ட கழுவி வைக்கணும், அவங்க அவங்க வேலைய அவங்க அவங்களே செஞ்சுக்கணும்ங்கிறதெல்லாம் பெரியம்மாவோட Dinner சட்டங்கள்.

நான் YWCAல படிச்சப்ப பெரியம்மா வீட்டுல தான் மதிய சாப்பாடு சாப்பிட போவேன், பெரியம்மாவுக்கு ஒவ்வொரு உடம்பு நோவா வரத பாத்திருக்கேன், மொதோ Migraine, அப்புறம் எலும்பு தேய்மானம், மூட்டு வலி இப்புடி ஒன்னு ஒண்ணா வந்துச்சு. இது எல்லாத்தோட எனக்கு மத்தியானம் சமைக்கவும் செய்யும். அதால எந்திரிக்க கூட முடியாத வலி இருக்கும், ஆனா எனக்கு ஒரு சோறு குழம்பு கண்டிப்பா வெச்சிரும், பரவால்ல பெரியம்மா நான் வீட்டுலேர்ந்து சாப்பாடு கொண்டு வரேன்னு சொன்னாலே கோவிச்சுக்கும், திட்டும். தலை வலில முனகும், அதோட அதா தளதளனு சாம்பார் ஊத்தி சாப்பிடுடானு சொல்லும், இப்பவும் சாம்பார இப்படி ஊத்தி சாப்பிடுறது பெரியம்மாகிட்டேர்ந்து பழகுனது தான், அதுவும் சாம்பார் அப்போ தான் வெச்சி கொதிக்க கொதிக்க இருக்கும், அந்த சூட்டோட ஒரு கவளம்  சோற திங்கும்போது இருக்க சுவை அதுக்கப்பறம் எங்க சாப்பிட்டாலும் கிடைச்சதில்ல, கண்டிப்பா யாரும் நம்பமாட்டாங்க, ஆனா இப்பவும் அப்புடி எப்பவாவுது சாம்பார தளதளனு ஊத்தி கவளம் சோறு கைல எடுக்கும்போது பெரியம்மா  ஞாபகம் தான் வரும், அப்போ என் கூட சாப்பிட உக்காந்திருக்கங்ககிட்ட இத பத்தி சொல்லுவேன், கிட்ட திட்ட என்னோட நெருங்கிய நண்பர்கள் எல்லாரும் இத கேட்டிருப்பாங்க.

எழுத்தாளர் எஸ்.ரா ஒருமுறை சொன்னார், பெரியவங்க இறக்கும் போது, அவங்க மூலம் இன்னொரு காலகட்டத்துக்கு இருந்த ஒரு தொடர்பு அறுந்து போகுதுனு, நான் இப்படி சாப்பிட போகும்போது, ஒன்னு பெரியம்மா வீட்டுல இருக்க மங்கையர் மலர் படிச்சுட்டே சாப்பிடுவேன் (பெரியம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு தான்), இல்ல பெரியம்மா அது சின்ன வயசு கதை, ஊரு கதை, எப்படி ஒருத்தங்க நமக்கு சொந்தம்னு விளக்குற கதை கேட்டுட்டே சாப்பிடுவேன். அது ஏதோ அந்த காலத்தோடு ஒரு தொடர்பு மாதிரி தோணும்.

கடைசியா ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப பெரியம்மாவ பாத்தப்ப மெலிஞ்சு பொய் இருந்துச்சு, ஆனா பெரியம்மாவுக்குனு ஒரு உருவம் என்மனசுல இருக்கு, அது வெறும் பெரியம்மா இல்ல, அந்த கோல்ட் frame கண்ணாடில, அந்த அதட்டல்ல ஒரு கம்பீரம் தெரியும், எனக்கு இந்த ராஜ கதைகள்லாம் படிக்கும் போது ராஜ் மாதா அப்புடின்னு கேக்கும்போதும் அவங்க பெரியம்மா மாதிரி தான் இருப்பாங்கன்னு உருவகபடுத்திப்பேன் 


இப்போ எங்க அம்மா காசிக்கு போய்ட்டு அன்னலெட்சுமி சாமி சிலை வாங்கிட்டு வந்திருக்கேன்னு காட்டுச்சு, அத சாமி அலமாரில வைக்கணும்னு சொல்லி எம்மவள்ட்ட காட்டிட்டு இருந்துச்சு, அந்த சிலை கைல கரண்டி வச்சிருக்க மாதிரி இருக்கும், இதெல்லாம் சும்மா சிலை பாப்பா, நானெல்லாம் உண்மையான அன்னலெட்சுமி சமைச்சதையே சாப்பிட்டிருக்கேன்னு எம்மவள்ட்ட இந்த கதையெல்லாம் சொல்லணும்னு இருக்கேன்...

இன்னும் எவ்வளவோ ஞாபகங்கள், எல்லாத்தையும் எழுதிட முடியாதுல!!!!! 


3 கருத்துகள்:

  1. அருமை.சரளமான நடை. கூடவே பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி உணர்வை கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமை.சரளமான நடை. கூடவே பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி உணர்வை கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க! சிலரொட இழப்பு ஈடு செய்ய முடியாது அப்படிபட்ட இழப்பு தான் எங்க பெரியம்மாவோட பிரிவு. அந்த ஞாபங்கள ஒரு சின்ன பதிவாக்க செஞ்ச முயற்சி தான் இது!

      நீக்கு