வியாழன், 14 பிப்ரவரி, 2013

நீயா நானா கோபிநாத்தின் கல்லூரி சொற்பொழிவுகள் பகுதி - 2

 நீயா நானா கோபிநாத்தும் கல்லூரி சொற்பொழிவுகளும் - முதல் பகுதியின் தொடர்ச்சி ...

கருத்து 7: அணுஆயுதம் வைத்திருப்பவன் தான் வல்லரசென்றால் அமெரிக்கா தான் வல்லரசு!! அறிவு வைத்திருப்பவன் தான் வல்லரசென்றால் இந்தியா தான் வல்லரசு!!

இந்தியா சமீபத்தில் AWACS என்ற தாக்குதல் முன்னெச்சரிக்கை தொழில்நுட்பத்தினை இஸ்ரேல் நாட்டிடமிருந்து வாங்கியது. இது 1960களில் மேற்க்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். இதையே இஸ்ரேல் மேலும் தரப்படுத்தி, 1990களில் உருவாக்கியது. இதை இந்தியாவிற்கு 2004 ஆம் வருடம் விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டது, அதன்படி 2012 ஆம் வருடம் மூன்று விமானங்களை கொடுத்தது. இதை இஸ்ரேலிடமிருந்து வாங்கினோம் என்று இந்தியாவின் விமான படை தளபதி பெருமிதத்துடன் கூறினார். கொஞ்சம் யோசித்து பார்த்தால், இஸ்ரேல் பழைய திருச்சி மாவட்டத்தின் அளவே உள்ள ஒரு நாடு. அதன் 80 சதவிகித நிலம் பாலைவன நிலம், அங்கு எண்ணெய் வளம் கூட கிடையாது. ஆனால் எல்லா வளமும் கொண்ட அறிவை அதிகமாக மூட்டைகட்டி வைத்திருக்கும் நாடு  என்று சொல்ல கூடிய இந்தியா இத்தகைய தொழில்நுட்பத்தினை தயாரிக்க முடியாமல் அத்தனை சிறிய நாட்டிடம் போய் காசு கொடுத்து தேசத்தின் உயரிய ரகசிய துறையான விமான படையின்  முக்கிய ஆயுத தளவாடமாக வாங்குகிறதே, இதற்கு தான் அறிவை வைத்திருக்கும் வல்லரசு என்று பெயரா?
ராணுவ தளவாடங்களை விடுவோம், இந்தியாவிடம் தற்பொழுது அணு ஆயுதம் உள்ளது, முன்னால் பிரதமர்கள் திருமதி.இந்திரா காந்தி மற்றும் திரு.வாஜ்பாயி அவர்கள் பிரதமராக இருந்த பொழுது இந்தியா அணு ஆயுத வெடிப்பு சோதனை செய்து, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளின் வரிசையில் இடம்பெற்றது. ஆனால் நம் அணுவுலைகள் யாவும் ரஷ்ய நாட்டின் உதவி பெற்று செய்தது இவையாவும் யுரேனியம் எரிபொருள் கொண்டு செயல்படகூடியது, அறிவினை கொட்டி வீணடித்து கொண்டிருக்கும் இந்தியா தானே செய்து கொள்ளவில்லை. ஒரு வேளை ஏற்கனவே இருக்கும் பொழுது எதற்கு மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். தவறில்லை, ஆனால் எப்பொழுது நாம் அணு உலைகளை நிறுவ ஆரம்பித்தோமோ அன்றே நமது தேசத்தில் பெரும் அளவில் கிடைக்கும் தோரியம் எரிபொருள் கொண்டு செயல்பட கூடிய அணுவுலைகளை நிறுவுவதற்கான ஆராய்ச்சிகளை தொடங்கி இருந்தால் கூட இன்று நாம் யுரேனியம் எரிபொருளை வாங்குவதற்கான அமெரிக்காவின் 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டாம். கடைசியாக 2010ஆம் வருடம் Kakrapar-1 என்ற அணு உலை மையத்தில் தோரியம் எரிபொருள் கொண்டு இயங்கும் மாதிரி அணுவுலை (Model Nuclear Plant) ஆராய்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த "மாதிரி" அணுவுலையே 2013 ஆம் ஆண்டு தான் உற்பத்தியை தொடங்குமென்றும் கூறினார், இந்த வருடம் அத்திட்டத்தினை ஒத்தி வைக்க போவதாக கூறுகின்றனர். அமெரிக்காவோ இந்தியாவினை அணு எரிபொருள் சம்பந்தமான 123 ஒப்பந்தத்தினை கொண்டு நம் நாட்டின் அணுசக்தியே தங்கள் கட்டுப்பாட்டில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது. ஆக அமெரிக்கா அணு ஆயுதமும் வைத்து கொண்டு, நம்முடைய அணுசக்தி துறையின் செயல்பாடுகளையும் முடக்ககூடிய சக்தி கொண்டு விளங்குகிறது, அதாவது அறிவோடு சிந்தித்து வலைபின்னியிருக்கிறது. நாமோ உலகத்தின் மொத்த அறிவையும் மூட்டை மூட்டையாக நாம் தானே அடுக்கி வைத்துள்ளோம், அப்போ நாம் தானே வல்லரசு என்று கண்ணை திறந்து பார்க்காமல் கனவுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கருத்து 8: Pizzaவை உங்களிடத்தில் மார்க்கெட் செய்துவிட்டார்கள், நீங்கள் ஏன் இட்லியை மார்க்கெட் செய்யவில்லை??

நானும் எனது நண்பர் ஒருவரும் சென்னையில் உள்ள ஒரு pizza கடையில் நுழைந்து தமிழில்  "சீஸ்"  பிஸ்ஸா என்ன விலை என்று கேட்டோம். அதற்கு அந்த கவுன்ட்டரில் உள்ள பெண் எங்களை மேலே கீழே பார்த்து விட்டு வெளியே தகவல் பலகை உண்டு போய் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு எங்கள் பதிலுக்கு எதிர்பார்க்காமல் அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க ஆரம்பித்து விட்டார். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஆனால் அவர் பார்த்த பார்வையும், பேசிய தோரணையும், உங்களுக்கெல்லாம் எதற்கு பிஸ்ஸா என்பது போல் இருந்தது. இது தான் உண்மையில் இட்லியை மார்க்கெட் செய்யாததற்கு காரணம். இதை படித்தவுடன் எனக்கு ஏதோ தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விட வேண்டாம். நம் மக்களின் எண்ணவோட்டங்களை ஓர் அளவுக்கு புரிந்து கொள்ளகூடியவன் என்பதால் சொல்கிறேன்.  நம்மவர்கள் பலரும் பிஸ்ஸா ஏதோ மேலை நாட்டவர் அல்லது மேன் மக்களின் கேளிக்கை உணவு என்று நினைத்து, அதை உண்டால் தாமும் மேலை நாட்டவர் போல் நடந்து கொள்கிறோமென்று நினைகின்றனர். தாழ்வுமனபான்மையினால், தங்களிடம் சொந்தமாக இருக்கும் பல நல்ல விஷயங்களை பழமை என்றும் இழிவு என்றும் நினைகின்றனர், இதனாலேயே இட்லியை போன்ற ஒரு உணவை வெளி உலகத்திற்கு மார்க்கெட் செய்யலாமென்ற எண்ணம் கூட தோன்றவில்லை. மேலும் பிஸ்ஸா போன்ற ஒரு பண்டத்திற்கு தேவையான தக்காளி பழ குழம்பினை எளிதாக பத படுத்த ஆய்ந்து அறிந்து உலகம் முழுதும் விற்கின்றனர், ஆனால் நாம் இட்லிக்கு தேவையான சாம்பார்-சட்னியயை சாதாரண வெப்பநிலையில் பதப்படுத்தும் முறைகளை பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. எப்பொழுது இந்த சிந்தனை வருமென்றால், இட்லி போன்ற நம் உணவின் மீது நமக்கே ஒரு மதிப்பு வரும்போது தான் இவ்வாறான சிந்தனைகள் வரும். இதற்கு முதலில் நமக்குள்ளே இருக்க கூடிய மேல் நிலை கீழ் நிலை போன்ற எண்ணங்கள் மாற வேண்டும். இன்றும் நியூயார்க் நகரின் இந்திய உணவகங்களில் சரவண பவனின் இட்லி சாம்பார் இடத்தினை எந்த உணவும் பிடிக்கவில்லை, ஆனால் துரிதமான சாதாரண வெப்பநிலையில் பல நாட்கள் பதபடுத்த கூடிய இட்லி சாம்பார் உணவு வகைகளை இன்னும் எவரும் உருவாக்கவில்லை. நமது உணவினை பற்றிய எண்ண ஓட்டங்கள் மாற்றப்படும்போது, புதிய சிந்தனைகள் உதயமாகி நம்மவர்கள் பலரும் இட்லியை மார்க்கெட் செய்வார்கள். அதுவரையில் பிஸ்ஸா என்ன இத்தாலியின் ஆட்டுபுளுக்கைகள் கூட நம்மிடம் மார்க்கெட் செய்யப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. இதையெல்லாம் சொல்லி மாணவர்களின் மனதில் இருக்கும் இன-கலாசார தாழ்வு எண்ணங்களை மற்ற சொல்லியிருக்கலாம்.

கருத்து 9: BMW கார் நமது தெருக்களில் ஓடட்டும், அவற்றில் வைக்கோல் ஏற்றி செல்வோம்

 ஏன் RollsRoyce கார் மீது வைக்கோல் ஏற்றி செல்லலாமே? BMWவை விட சிறந்த கார் ஆயிற்றே? BMW, Porsche, Benz, Audi, போன்ற கார்கள் ஜெர்மானிய நாட்டு கார்கள். RollsRoyce இங்கிலாந்தின் கார். இவை எல்லாம் உலகின் விலை உயர்ந்த கார்கள். இவற்றில் RollsRoyce வைத்திருப்பதே மிக பெரிய அந்தஸ்து என்று கூறுவார்கள். இதில்  வேடிக்கை என்னவென்றால் மேலை நாடுகளில் இந்த Benz, Porsche, Audi போன்ற கார்கள் உண்மையாக விவசாய பயன்பாட்டிற்கு  Pickup-Truck என்ற பெயரில் உபயோகத்தில் உள்ளது. அதையே கூட நாமும் வைக்கோல் ஏற்றி செல்ல உபயோகிக்கலாம், வேண்டாமென்றா சொல்கிறார்கள்? நாமும் வெக்கமில்லாமல் ஆஹா BMW Pickup Truck கிடைக்கிறது என்று வாங்கி கொள்வோம். உலகின் தலை சிறந்த கார்களில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கார்கள் எதுவுமில்லை. சொந்தமாக உலக தரம் மிக்க ஒரு காரினை நாம் நமது தேசத்தில் வடிவமைத்தோமா? இல்லையே! ஆஸ்திரேலியாவில் வசித்த எனது அண்ணன் ஒரு முறை சொன்னார், அங்கு உள்ள செய்தித்தாள் ஒன்று "Someone has to teach the Indians that even a car model has an expiry date" என்று குறிப்பிட்டு நமது Ambassador கார்களை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டதாம். கொஞ்சம் இனவெறி கொண்டு எழுதியது போல் இருப்பினும், சிந்தித்து பார்த்தால் இந்திய தயாரிப்பாக இருக்கும் ambassador கார்கள் இன்று வரை அதே 1950 வருடத்திய வடிவத்தில் தானே வருகிறது? உடனே நம்மவர்கள் பலர், அமெரிக்க ஐரோப்பிய கார்கள் எல்லாம் நம்மூர் ரோட்டில் தடுமாறுகிறதே, இதுவே நமது ambassador கார்கள் அருமையாக தாக்குபிடித்து வருகிறது, மேலும் மேலை நாட்டின் கார்கள், ஜப்பானிய கார்கள் யாவும் ஒரு சிறிய விபத்தில் சிக்கினால் கூட அப்பளம் போல் நொறுங்கி விடும் நமது ambassadorரோ ஒன்றும் ஆகாமல் அப்படியே நிற்கும்...இதற்கு என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்கலாம். நமது ரோடுகளும் நமது மக்களும் இன்றும் அதே பழைய நிலையில் இருப்பதால் நம்மை போன்ற மூன்றாம் உலக நாட்டிற்கு ambassador போன்ற கார் மட்டுமே தகும் என்று தான் சொல்ல தோன்றுகிறது. நல்ல வேலையாக முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த தங்க நாற்கர சாலை திட்டத்தினால் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் எண்ணி பார்த்திருக்க முடியாத அளவிற்கு மேம்பட்டிருக்கிறது.ஆனால் வெளியேறுவதற்கான பாதைகள் (Exits), நெடுஞ்சாலைகளை கடப்பதற்கான பாலங்கள் (Over Bridges and Underpasses), நெடுஞ்சாலை தடுப்பு சுவர்கள் ஆகியவற்றை சரியாக அமைக்காததால், பல இடங்களில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நடுநடுவே மனிதர்களும் விலங்குகளும் கடக்க நேரிடுகிறது, இதனால் ஏகப்பட்ட விபத்துக்களும் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இவையெல்லாம் செய்வதற்கு ஏகப்பட்ட செலவு பிடிக்கும் அதனால் தான் நமது பொறியாளர்கள் இவற்றையெல்லாம் சிக்கனமாக தவிர்த்து விட்டனர் அல்லது இப்பொழுது தானே நம் நாடு வளர்ந்து வருகிறது இவற்றையெல்லாம் படிப்படியாக தான் செய்ய முடியும் என்று சிலர் கூறலாம். ஆனால் இவற்றிற்கு நாம் கொடுக்கும் விலை மிக பெரியது. பாதுகாப்பாக அதே சமயம் விரைவாக பயணிக்க உதவுவதே நெடுஞ்சாலைகள், இதுவே நெடுஞ்சாலை பொறியியல் துறையில் கற்று கொடுக்கபடுகிறது. இன்னும் நமது தேசத்தில் இத்துறைக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அதே சமயம் நம் மக்களின் சாலை விதிகள் பற்றிய விழிப்புனர்வோ கேலிகூத்தாக இருக்கிறது, நம் மக்களின் சாலை விதிகள் பற்றிய அறிவு என்னமோ இன்னும் 1950ல் தான் நிற்கிறது அதனால் தான் உலகிலேயே ஒரு வருடத்திற்கு 1 லட்சம் மக்களை சாலை விபத்துகளுக்கு பலிகொடுக்கும் நாடாக இந்தியா முன்னிலை வகிக்கிறது. ஆகையால் நம்மக்களுக்கு BMW கொடுத்து வைக்கோல் ஏற்ற சொன்னாலும் RollsRoyce கொடுத்து வைக்கோல் ஏற்ற சொன்னாலும் அவர்கள் பத்திரமாக ஒட்டி வீடு போய் சேருவார்களா என்பது சந்தேகமே.
சினிமா தனமான வசனங்களை பயன்படுத்தாமல், திரு. கோபிநாத் அவர்கள் நம் தேசத்தின் உண்மையான பிரச்சனைகளை கூறி அதற்கு பொறியியல் மாணவர்களாகிய நீங்கள் ஏன் எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சனைகளுக்கான தீர்வாக ஒரு வழியை கண்டுபிடிப்பதை லட்சியமாக கொண்டு செயல்படக்கூடாது என்று வினவினால் அந்த மாணவர்களின் சிந்தனைகள் மற்றும் செயல்களை தூண்டிவிடலாமே?

கருத்து 10: மேலை நாடுகளில் பெரிய பெரிய பல்கலைகழகங்களை பார்த்திருக்கிறேன் அங்கெல்லாம் இவ்வளவு மாணவர் கூட்டம் கிடையாது, அவையெல்லாம் நமக்கு முன் ஒன்றுமில்லை

அமெரிக்காவின் ஹார்வர்ட், யேல், ஸ்டான்போர்ட், MIT இன்னும் எத்தனையோ ஐரோப்பிய நாடுகளின் பல்கலைகழகங்களில் எல்லாம் இப்படி பெரும் கூட்டம் கூடாது என்பது உண்மை தான். ஏனென்றால் அங்கெல்லாம் சொற்பொழிவாளர்கள் வந்தால், அவர்கள் எந்த தலைப்பில் பேச போகிறார்கள் அவர்கள் எந்த துறையில் வல்லுனர்கள் என்று தெரிந்துகொண்டு தான் அந்த அரங்கத்திற்கு வருவார்கள். ஆனால் நமது தனியார் கல்லூரிகளில் ஆட்டு மந்தைகளை வழிநடத்துவது போல இவ்வாறான நிகழ்வுகளில் மாணவர்களை வழிநடத்தி கொண்டுவருகின்றனர், மேலும் இந்திய இளைஞர்கள்  மற்றும் மக்களின் சினிமா மற்றும் டிவி மீதான கவர்ச்சியை எந்த தேசத்திலும் பார்க்க முடியாது, ஆகவே திரு. கோபிநாத் அவர்களின் சொற்பொழிவுகளுக்கு இவ்வளவு கூட்டம் வருவதில் ஆச்சர்யமில்லை. மற்ற தேசங்களில் குறிப்பாக மேலை நாடுகள் மற்றும் சில கிழக்காசிய நாடுகளிலெல்லாம் ஒரு சினிமா அல்லது டிவி பிரபலத்தின் சொற்பொழிவுகளுக்கு எவ்வளவு கூட்டம் வருமோ அதே அளவு கூட்டம் அறிவியல் அறிஞர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், தத்துவாசிரியர்களுக்கும் வரும். சமீபத்தில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் விஞ்ஞானி திரு. வெங்கட்ராமன் அவர்கள் 2009 ஆம் ஆண்டு நோபெல் பரிசு பெற்றார். அதன் பிறகு ஒரு முறை இந்தியா வந்தபோது அவருக்கு அளிக்கபட்ட சினிமாத்தனமான வரவேற்பையும் மீடியா வெளிச்சத்தையும் கண்டு சற்று மிரண்டு தான் போனார், அவர் எங்கு பேசினாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சற்றே கடுப்பான அவர், இதற்கு முன்னே தான் பலமுறை சென்னை பல்கலைகழகத்தில் உரையாற்றியுள்ளதாகவும், அப்போதெல்லாம் ஒரு 50 100 பேருக்கு மேல் ஆட்களை பார்த்ததில்லை என்றும் ஆனால் இன்றோ அதே சென்னை பல்கலைகழகத்தில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியுள்ளதாகவும், தனக்கு சம்பந்தமே இல்லாத துறைகளிலெல்லாம் தன்னிடம் கருத்துகேட்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டாராம் இது தான், இந்த சினிமாத்தனமான கவர்ச்சி தான்,   நமது மக்களின் எண்ணங்களை உருவமைக்கிறது.

ஒரு முறை என்னுடைய நிறுவனத்திற்கு இஸ்ரேலிய கணித பேராசிரியர் ஒருவர் ஒரு சொற்பொழிவுக்காக வந்தார். அதற்கான விளம்பரம் நிறுவனத்தின் அனைத்து தகவல் பலகைகளிலும் ஒட்டபட்டிருந்தது. அவர் பேச வேண்டிய தலைப்பு "தர்க்கத்தின் வரலாறு" (History of Logic), ஒரு மணி நேர சொற்பொழிவு. அங்கு சென்று பார்த்தபோது நான் மட்டும் தான் அந்த நிகழ்ச்சிக்கு கிறுக்கன் போல் பதிவு செய்திருக்கிறேன் என்று தெரிந்தது, சென்னையில் மட்டும் 25000 பேர் வேலை பார்க்கும் எங்கள் நிறுவனத்திலிருந்து ஒருவன் மட்டுமே இத்தகைய சொற்பொழிவுக்கு பதிவு  செய்திருப்பது வேதனையான விஷயம். ஆரம்பிப்பதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன் எங்கள் நிறுவனத்தில் அப்போது தான் கல்லூரி படிப்பை முடித்து புதிதாக சேர்ந்து எந்த வேலையும் பெறாமல் இருந்த இளையோர்களை கூட்டமாக அழைத்து வந்து அரங்கத்தினை நிரப்பினர். அங்கே கூட்டம்  நிரப்பபட்டிருந்தது ஆனால் யாருக்கும் அந்த அருமையான சொற்பொழிவை கிரகித்து கொள்வதற்கான ஆர்வம் இல்லை. இதுவே சிலகாலத்திற்கு பின் "நீயா நானா" திரு. கோபிநாத் அவர்கள் நடத்திய நீயா நானா நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட கூட்டம். முன்பதிவு என்று சொன்ன உடனே அனைத்து இடங்களும் தீர்ந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட பலர் அதை பற்றியே எதேதோ  பேசிகொண்டிருந்தனர். ஆக இதிலிருந்து தெரிவது ஒன்று தான், நமது தேசத்தில் சினிமா அல்லது டிவி பிரபலங்கள் என்ன  பேசினாலும் கேட்பதற்கு எக்கச்சக்க கூட்டம் கூடும், ஆனால் பல அருமையான சொற்பொழிவுகளை அற்ற கூடிய அறிஞர்களின் சொற்பொழிவுகளை கேட்க  அதிக கூட்டம் கூடாது. மேலை நாடுகளில் எல்லாம் அதிக கூட்டம் கூடவில்லை என்றால் உடனே எவரும் அறிவில்லாதவர்கள் என்று அர்த்தமில்லையே?   அமெரிக்காவின் MIT தொழில்நுட்ப கல்லூரியில், தங்கள் கல்லூரி மாணவர்களின்  உலகபுகழ் பெற்ற கண்டுபிடிப்புகளை பொதுமக்களின் பார்வைக்காக தனியாக ஒரு அருங்காட்சியகமே வைத்துள்ளனர். இரண்டு அடுக்கு கொண்ட விஸ்தாரமான கூடத்தில் ஒவ்வொரு முக்கியமான கண்டுபிடிப்பும், அவற்றின் உபயோகமும், அவற்றை பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளன. அதில் கூட அனைத்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் வைக்கபடுவதில்லை, மாறாக உலக புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் மட்டுமே வைக்கபடுகின்றன. அதற்கே இரண்டடுக்கு கொண்ட அத்தனை பெரிய அருங்காட்சியகம், இன்னும் அனைத்து மாணவர்களின் கண்டுப்பிடிப்புகளையும் வைத்திருக்க வேண்டுமானால் எத்தனை பெரிய அருங்காட்சியகம் வேண்டுமோ? நமது தேசத்தில், மாணவர்களின் ஆராய்ச்சிகள் கூட வேண்டாம், நம் நாட்டின் தலைச்சிறந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் கூட பொதுமக்களின் பார்வைக்கு வைக்கபடுவதில்லை.  
மாணவர்களின் தலைச்சிறந்த ஆய்வுகளை இரண்டடுக்கு அருங்காட்சியகம் வைக்குமளவுக்கு அவர்களிடம் கும்பல் இருக்கிறது, ஆனால் இவரின் கூட்டத்திற்கு கும்பல் இல்லையெனில் அவர்களை ஏதோ  திறமையில்லாதவர்கள் போல சித்தரித்திருப்பது சரியா?
ஆக, கூட்டம் கூடினால் மட்டும் பெரிய பல்கலைகழகமில்லை மாறாக சிந்தனைகளை தூண்டும் இடமே பெரிய பல்கலைகழகம் என்று அந்த மாணவர்களுக்கு கூறினால் தானே அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைப்பதாகும்?

கருத்து 11: இந்த இளைஞர்களை நம்பித்தான் இந்திய பிரதமர் சுனாமிக்கு உதவி வேண்டாம் என்று கூறினாராம், இந்திய அரசியல் தலைவர்கள் எங்கள் இளைஞர்கள் இருக்கிறார்கள் எல்லாம் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்களாம்

இந்திய  வல்லரசல்லவா அதனால் தானோ என்னவோ இந்திய பிரதமர் சுனாமிக்கு உதவி வேண்டாம் என்று கூறியிருப்பார் :) 
இந்த நகைச்சுவையைகேட்டு பல நாட்களுக்கு பின் மனம் விட்டு சிரித்தேன். ஆனால் உண்மை என்ன? கண்டிப்பாக அவர் இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற தன்னம்பிக்கையில் சொல்லவில்லை, அன்றைய தேதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது சதவிகிதத்திலிருந்தது.  அந்த தெம்பில் தான் அவர் அப்படி கூறினார். மேலும் இந்தியாவிற்குள்ளேயே ஏகப்பட்ட பொருளாதார உதவிகள் குவிந்தன, அவற்றை கூட சரிவர பயன்படுத்திக்கொள்ள சரியான பேரிடர் மேலாண்மை அமைப்பு இல்லாததால் அந்த உதவிகள் வேண்டியவர்களை சேராமல் வீணடிக்கப்பட்டன.
அப்படி வீராவேசமாக பேசிய அதே பிரதமர் தான், அதற்கு பிறகு பலசமயங்களில் மேற்குலக நாடுகளின் அழுத்தத்திற்கு பணிந்து நடந்தார், உதாரணமாக அமெரிக்காவின் அணு ஒப்பந்தம் சமீபத்தில் நடந்த சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றில் ஏன் இந்திய பிரதமர் இந்திய இளைஞர்களை நம்பி முடியாது என்று கூறவில்லை?
சரி இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்திய இளைஞர்களை நம்பி "இந்திய வளர்ந்துவிடும்  எந்த பிரச்சனைகளையும் சந்தித்து வென்றுவிடுவோம்" என்று  நினைகின்றனரா? அப்படி நினைக்கும் அளவுக்கு அவர்களின் தேசபற்று இருக்கிறதா? காமராஜர், நேரு காலத்தில் இப்படி திரு. கோபிநாத் அவர்கள் பேசியிருந்தால்  அது உண்மையாக இருந்திருக்கும், இன்றைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளுக்கு துளி கூட தேசபற்று கிடையாது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு இந்திய இளைஞர்கள் மேல் திடீர் நம்பிக்கை வந்து, இந்திய தேசத்தின் மீது திடீரென்று பற்று வந்து துணிச்சலாக மேலைநாடுகளின் ஏளனங்களை சந்திக்கிறார்கள் என்பது எவ்வளவு தவறான சித்தரிப்பு? மாணவர்கள் தான் இந்த நூற்றாண்டின் பல அரசியல் புரட்சிகளை முன்னெடுத்தனர்,  அத்தகைய மாணவ சமுதாயத்தின் முன் இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலையை பற்றி தவறான எண்ணங்களை வளர்ப்பது சரியா?

கருத்து 13: BRIC ரிப்போர்ட் இந்தியாவுக்கு தான் வல்லரசு ஆக கூடிய சாத்தியம் இருக்கிறது, சீனாவுக்கு கூட இல்லை என்று கூறுகிறது

முதலில் நம்மவர் பலருக்கு "வல்லரசு என்றால் என்ன?" என்று கூட தெரியுமா என்று தெரியவில்லை. சரி, வல்லரசு என்றால் என்ன தான் அர்த்தம்?. எந்த தேசம் தன் மக்கள் நலம், கல்வி, பாதுகாப்பு, பொருளாதாரம், உணவு, விவசாயம், அறிவியல் வளர்ச்சி ஆகிய அனைத்திலும் முன்னிலை பெற்று, சட்டத்தின் வலுவான ஆட்சியோடு விளங்குகிறதோ அத்தகைய தேசத்தின் அரசே வல்லரசு.
இவற்றில் நமது தேசம் எத்தனை விஷயங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது? இல்லை எத்தனை விஷயங்களில் முதல் இடத்தை அடையும் பாதையில் பயணிக்கிறது? எதிலுமே இல்லை என்பது தான் கசப்பான உண்மை. 1991ஆம் வருடம் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் நின்றது, அப்பொழுது நமது பொருளாதாரத்தை உலக மயமாக்கலுக்கு மாற்றியது அன்றைய காங்கிரஸ் அரசு அதன் பிறகு தான் நம்முடைய பொருளாதாரமே வளர தொடங்கியது. அதுவரை ஆயிரம் இரண்டாயிரம் என்று கமிஷன் அடித்து கொண்டிருந்த சில அரசியல்வாதிகள் லட்சம், கோடி, ஆயிரம் கோடி என்று வளர ஆரம்பித்தனர். மேலும் பல சமயங்களில் சட்ட திட்டங்களையே தங்களுக்கு சாதகமாக வளைக்க ஆரம்பித்தனர் விளைவு இன்று இந்தியா ஒரு Crony-Capitalist நாடு, அதாவது லஞ்ச-லாவண்ய-முதாளித்துவ நாடு.இப்படியான நாட்டில் பண முதலைகளுக்கும், பெரும் முதலாளிகளுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சட்டங்கள் சலாம் போடும், அவர்களை தவிர்த்து மற்ற சாதாரண மக்களுக்கு பெரிய நன்மை கிடையாது. நன்மை இல்லை என்றால் கூட பரவாயில்லை, பல சமயங்களில் சாதாரண மக்களுக்கு எதிரியாகவே சட்டங்கள் மாற்றப்படும் அபாயம் உள்ளது. இன்று நம்மிடத்தில் iPad, iPhone, Android, Rolex, Porsche, Rolls Royce, Private Jet எதுவும் இருக்கலாம், ஆனால் எல்லாமே மேலைநாட்டு வியாபாரிகள் கொண்டு வந்து விற்பது தான். அதனால் வரும் லாபம் அனைத்தும் அந்த நாட்டுக்கே சொந்தம். நமக்கு என்னமோ அதை உருவாக்கும் தொழிற்சாலைகளில் அல்லது நிறுவனங்களில் வேலை கிடைக்கும். அதனால் முன்பு இருந்தது போல வேலை இல்ல திண்டாட்டம் குறையலாம், ஆனால் தொழிலாளர் பாதுகாப்பு, அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம், வேலை நேரங்கள், ஓய்வு விடுமுறைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்படும். உள்நாட்டு உற்பத்தியாளர்களை பற்றி சொல்லவே வேண்டாம் அவர்களின் நிலை அதல பாதாளம் தான்,  நம்முடைய உள்நாட்டு உற்பத்தியாளர்களை நம் தேசத்தை சந்தைப்படுத்துவதக்கு முன் ஓரளவாவது தயார்படுத்தியிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இந்தியா பெரிய சந்தையாகவும், பொருள் உற்பத்தி செய்வதற்கு குறைந்த கூலியில் வேலை ஆட்களை கொடுக்கும் நாடாக மட்டுமே திகழும்.அமெரிக்க, ஐரோப்பா, சீன போன்ற வல்லரசுகள் மேலும் மேலும் வளருமே தவிர தேயாது.
சரி உற்பத்தி துறையை விடுங்கள் இன்று நமது தேசம் தான் கணிப்பொறி துறையில் அசகாய வளர்ச்சிப்பெற்றுள்ளது, நம்முடைய கணிப்பொறி துறை பொறியாளர்கள் எல்லோரும் வெள்ளைக்காரன் நம்மிடமிருந்து பறித்து சென்றவற்றை மீண்டும் நம் நாட்டுக்கே கொண்டுவருகின்றனர் என்று பலரும் நினைகின்றனர். அதனால் நம் நாடு வல்லரசாகிவிடும் என்று நினைபவர்கள் கூட உண்டு, உண்மையில் மேலை நாட்டு நிறுவனங்கள் கணிப்பொறி துறையில் அவர்கள் நாட்டவரை வேலைக்கு வைத்தால் ஏகப்பட்ட சம்பளமும், இதர செலவீனங்களும் ஆகுமென்று குறைந்த விலையில் கிடைக்கும் இந்திய கணிபொறியாளர்களை வேலைக்கு சேர்த்துகொள்கின்றனர். ஓர் அமெரிக்க பொறியாளர் ஒரு மாதத்திற்கு சாதரணமாக இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கினால், இந்திய பொறியாளரோ அதே வேலைக்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகின்றார். இது ஏதோ இன்றைக்கு கண்டுபிடித்த வியாபார தந்திரம் என்று நினைத்துவிடாதீர்கள், 150 ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தீவுகளிலும், இலங்கை, மலாயா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் கரும்பு, வாழை, தேயிலை ஆகிய தோட்டங்களில் வேலை செய்ய இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அன்று அழைத்து செல்லப்பட்ட கூலிகளுக்கும் இன்று அழைத்து செல்லப்படும் இந்திய பொறியாளருக்கும் பெரிய வித்தியாசமில்லை. அன்றைய தேதியில் அத்தகைய கூலி ஆட்களுக்கு கொடுக்கபடும் கூலியோ இந்தியாவில் கிடைக்கும் கூலியை விட மிக அதிகம். அதுவே ஒரு வெள்ளைகாரனை வேலை ஆளாக வைத்து கொண்டால் அவனுக்கு கொடுக்க வேண்டிய கூலியை பார்க்கும் போது, இந்திய தொழிலாளியின் கூலி என்னமோ கிள்ளி கொடுப்பது போல தான். அன்று போல் இன்று இல்லை, இன்று நம்மவர்கள் பலர் நாடு திரும்பி அங்கு சம்பாதித்த பணத்தினை நம் தேசத்தில் முதலீடு செய்கின்றனரே என்று நினைக்கலாம். அன்றும் கரிபியன் தீவுகள் தவிர்த்து மற்ற தீவுகளுக்கு சென்ற நம்மவர் பலரும் நிறைய சம்பாதித்து ஊர் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில் தான் சென்றனர், சிலர்  திரும்பி வந்து நிலம், வீடு என்று வாங்கினர் என்பது உண்மை. ஆனால் வெள்ளையர்கள் செய்தது என்னவோ சிறிய துண்டை கீறி கொடுத்துவிட்டு,மீதி உள்ள மலை அளவு லாபத்தினை முழுங்கிக்கொள்வது. இன்றும் அதுதான் நடக்கிறது, என்ன இங்கே சில சமயம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பதில் சில இந்திய முதலாளிகளின் நிறுவனங்கள் அந்த வேலையை செய்கின்றன. இன்று நம்மால் ஏன் அன்றைய கூலிகளையும் இன்றைய கணிப்பொறி வல்லுநர்களையும் சமன்படுத்தி பார்க்க முடிவதில்லையென்றால், இன்று பல மேலை நாடுகளில் நம்முடைய கணிப்பொறியாளர்கள் தங்கள் முன்னோர்கள் சந்தித்த எந்த சிரமங்களையும் எதிர்கொள்ளாமல் சுகமாகவே வாழ்கின்றனர், இதற்கு முழுமுதற் காரணம் கடந்த நூறு ஆண்டுகளில் மேலை நாடுகளில் பெரிய சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன, பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அதற்கு உறுதுணை புரிந்தன. இவையெல்லாம் அனைத்து மக்களும் சமம் என்ற கொள்கை கொண்ட அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டன. இதனால் தான் நம்முடைய பொறியாளர்கள் பலர் வெளிநாடுகளில் மிகவும் வசதியாக வாழ்கின்றனர். அடிப்படை என்னவோ, முதலாளித்துவ நிறுவனங்கள் எங்கு குறைந்த கூலியில் அதிக லாபம் கிடைக்கிறதோ அங்கு தான் கடைவிரிப்பர், இது தான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் அவர் கூறும் BRICS என்ற கூட்டமைப்பை பற்றி பார்ப்போம், கோல்ட்மன் சாக்ஸ் (Goldman Sachs) என்ற அமெரிக்க நிதி முதலீட்டு திட்ட நிறுவனத்தின் சேர்மன் ஜேம்ஸ் ஒ நீல் தான் BRICS என்ற வார்த்தையையும், அந்த நாடுகளின் வளர்ச்சியை கண்காணிக்க ஒரு குழுமத்தினையும் ஏற்படுத்தியது. இது எதோ உலக மக்கள் உய்ய உருவான பொது தொண்டு நிறுவனமென்று நினைத்தால் அது தவறு. இது ஒரு தனியார் நிதி மேம்பாட்டு நிறுவனம். இதன் அடிப்படை வேலை என்னவென்றால் Mutual Fund போன்ற நிதி மேம்பாட்டு திட்டங்களில் சேரும் அமெரிக்க வாடிக்கையாளருக்கு எந்த எந்த பங்குகளில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் அடையலாம், எவை எல்லாம் எதிர்காலத்தில் நிலைத்து தொடர்ந்து வளர கூடிய பங்குகள், எவையெல்லாம் சரிவை சந்திக்க கூடிய பங்குகள் என்று அறிவுறுத்தி, இவர்களின் ஆலோசனை படி முதலீடு செய்யும் வாடிக்கையாருக்கு லாபம் ஈட்டி கொடுத்து அதில் ஒரு சிறு சதவிகித தொகையை தங்களின் சேவை கட்டணமாக வசூலிக்கும் ஒரு நிறுவனம். சிறு தொகை தானே அதனால் இது எதோ சிறிய நிறுவனம் என்று நினைத்துவிடாதீர்கள். இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த நிறுவனம் தங்களின் Predictive Investment Strategy காக தான் BRICS என்ற ஒரு வார்த்தையையே உருவாக்கி அதையே ஏதோ புதிய உலகை ஆளபோகும் நாடுகள் போல் ஒரு மாயையை உருவாக்கியுள்ளது. ஜேம்ஸ் அவர்கள் தான் BRICS என்ற அமைப்பின் வளர்ச்சியை பற்றிய அறிக்கையை தயார் செய்பவர், அவரே கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் சேர்மனும் கூட, அப்படி இருக்கையில் அவரது நிறுவனத்தின் பங்கு முதலீடுகளுக்கு சாதகமாக  தானே அவர் அறிக்கையின் முடிவுகள்  இருக்கும்? அமெரிக்க நிதி நிறுவனங்கள் அனைத்திற்கும் சீனாவின் பொதுஉடமை சார்ந்த பொருளாதாரம் என்பது சிம்ம சொப்பனம், எப்படியாவது அதை ஒழித்துவிட்டு சீனாவும் ரஷ்யா போன்று லஞ்ச-லாவன்ய-முதலாளித்துவ நாடாக மாறவேண்டும் என்ற எண்ணமுண்டு. இதற்கு பிரேசில் மற்றும் இந்தியாவை பற்றி கவலைப்பட தேவையில்லை, இவை இரண்டும் ஏற்கனவே அப்படி தான் இருக்கின்றன. ஆகையால் பல சமயங்களில் சீனாவினை குறைந்த மதிப்பீடுகளில் தான் அமெரிக்க நிதி நிறுவனங்கள் கணக்கிடும். இதில் இன்னொரு நகைப்புக்குரிய செய்தி என்னவென்றால் கடந்த 2 வருடமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதால் இந்தியாவினை BRICS அமைப்பிலிருந்து எடுத்துவிடலாமா என்று கூட யோசித்து கொண்டிருக்கின்றனராம். இப்படியான ஒரு சொத்தை வாதத்தை வைத்து கொண்டு இந்தியா தான் வல்லரசு என்று BRICS அறிக்கை கூறுகிறது என்று சொன்னால் அது எவ்வளவு தவறு?
சரி ஒப்புக்கு சீனாவில் ஏகப்பட்ட பிரச்சனைகள் அதுவும் கம்யுனிச நாடு வேறு, இந்தியாவில் மக்களாட்சி அல்லவா நடக்கிறது அதனால் இந்தியாவுக்கு தானே வல்லரசு ஆகும் வாய்ப்பு உள்ளது என்று சொல்லவேண்டும் என்றாலும், சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு காரணமான கடந்த காலத்தினையும் சீனாவின் இன்றைய நிலையையும் பற்றி குறைந்த அளவாவது தெரிந்து கொண்டால், பிறகு ஒப்புக்கு கூட சொல்ல தோன்றாது
சீன 1949 ஆம் வருடம் கம்யுனிச குடியரசானது. 1974 ஆம் வருடம் வரை சீனா ஒரு மூன்றாம் உலக நாடு, அதற்கு பின் வந்த டெங் ஜியாங் பிங் என்ற சீன அதிபர் தான் இன்று சீனா ஒரு வல்லரசாக திகழ்வதற்கான முதல் விதையை தூவினார். சீனாவின் கம்யுனிச பொருளாதார கொள்கை என்பது ரஷ்ய கம்யுனிச பொருளாதார கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.  சீனாவில் குறைந்த முதலீடு கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ஊக்குவிக்கப்பட்டனர். டெங் ஜியாங் பிங்ன் காலத்தில் கொஞ்ச கொஞ்சமாக சீனா உலகமயமாக்கலுக்கு மாறியது, உடனே அனைத்து சீனாவிலும் வெளிநாட்டு வியாபார கடைகள் விரிக்கப்படவில்லை, சிறப்பு பொருளாதார மையங்கள் உருவாக்கபட்டன, அங்கே முதலில் வெளிநாட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன, நிறைய பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் இந்தியாவை போல் சீனாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் திறக்கலாமே தவிர சட்டங்களை எல்லாம் அவ்வளவு எளிதாக வளைக்க முடியாது. அதனால் தொழிலாளர்களுக்கு  மேலை நாட்டு தொழிலாளர்களை விட குறைந்த கூலி கிடைத்தாலும், தொழிலாளர் நல சட்டங்கள் வலுவாக கடைபிடிக்கப்பட்டன (இன்றும் வலுவாகவே கடைபிடிக்கபடுகின்றன ). இதன் மூலம் உண்மையாகவே சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வாழ்க்கை தரம் உயர ஆரம்பித்தது. பிறகு தங்கள் தேசத்தின் சிறு முதலாளிகள் மேலை நாட்டு நிறுவனங்களுக்கு இணையாக மோதுவதற்கு ஏற்ற களமமைத்து கொடுத்தனர், அதனால் இன்று சீனாவிலும் ஏகப்பட்ட கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்து சில பல நகரங்களையே சிறப்பு பொருளாதார மண்டலங்களாக அறிவித்து தங்களின் இரண்டாம் கட்ட நகரங்களிலும் வியத்தகு வளர்ச்சியை உருவாக்கினர். தங்கள் தேசத்தின் அறிவியல், கல்வி ஆகிவற்றை ஆய்வு செய்து, அதற்கு தேவையான மாற்றங்களை செய்தனர். இந்தியாவிற்கு பின் தான் சீனாவின் விண்வெளி ஆய்வுகள் சூடுபிடித்தன ஆனால் இந்தியாவிற்கு முன் மனிதனை விண்வெளியில் மிதக்க செய்துவிட்டனர். தங்களின் அடுத்த இலக்கு நிலவில் மனிதன் என்று சொல்லி அதற்கு உழைத்து கொண்டிருக்கின்றனர்.  சீனாவிலும் ஊழல், ஏற்ற தாழ்வுகள் போன்ற பிரச்சனைகள் உண்டு, ஆனால் இந்தியாவில் கடமையை செய்வதற்கே லஞ்சம் என்றால், சீனாவில் கடமையை மீறுவதற்கு தான் லஞ்சம் வாங்குகிறார்கள், தங்களின் கடமையை செய்வதற்கு யாரும் லஞ்சம் வாங்குவதுமில்லை கடமையை செய்யாமல் இருப்பதுமில்லை . மேலும் அவர்களின் விவசாய வளர்ச்சி திட்டங்களை பற்றி அறிந்தால் தான் தெரியும் நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோமென்று. சீனாவின் மூன்று பெரும் நதிகளை இணைத்து உலகிலேயே பெரிய அணையை உருவாக்கி, அதிலிருந்து மின்சாரமும், வறட்சி பிரதேசங்களில் கூட விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நீர் பாசன திட்டங்களையும்  வகுத்துள்ளனர். சீனாவின் இன்றைய ராணுவ வளர்ச்சிக்கு முன் இந்தியா ஒன்றுமே இல்லை என்பது ஊர் அறிந்த ரகசியம். வெறும் உற்பத்தி சார்ந்த நாடாக இருந்த சீனா இன்று சேவை துறையிலும் கால்பதிக்க தொடங்கிவிட்டது, கூடிய சீக்கிரமே சீனர்கள் கணிப்பொறி சேவை துறையிலும் கொடிகட்டி பறந்தாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை. அமெரிக்க மட்டுமில்லாமல் இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்திலும் சீன நாட்டு உற்பத்திகள்  குவிக்கப்பட்டு சீனாவின் அந்நிய செலவாணி உயர்ந்து கொண்டே இருக்கிறது. சீனாவில் மேலை நாடுகள் கடை விரிகின்றன என்றாலும் சீன உற்பத்தியாளர்களும் உலகெங்கிலும் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்த பொருட்களை அமோகமாக விற்கின்றனர்.  இதனால் குறுகிய காலத்தில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவாகியது.  இப்படியான ஒரு நாட்டில், கட்டுபாடற்ற சுதந்திரம் இல்லை என்பதால் வல்லரசு ஆகும் வாய்ப்பில்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? சீனா ஒரு வல்லரசு என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவே சொல்கிறார், BRICS  என்ற ஒரு வியாபார அமைப்பு சொன்னால் தான் சீனா வல்லரசா என்ன ? சீனாவில் சுதந்திரம் கிடையாது என்று சொல்கிறோம், ஆனால் டெங் ஜியாங் பிங்  சொன்னதை கேட்டால் அதில் எவ்வளவு உண்மைகள் உண்டு என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். "எந்த ஒரு அடிமைப்பட்ட இனமும் உடனடியாக கட்டற்ற சுதந்திரத்தை பெற்றால், அந்த சுதந்திரத்தின் அருமை புரியாமல் அது தவறான பாதைக்கு சென்று விடும், ஆகவே கடுமையாக அடிமைபடுத்தபட்ட இனம் முதலில் பொருளாதார சுதந்திரம் பெற்று பின் அரசியல் சுதந்திரம் பெற்றால் தான் அந்த சுதந்திரமும் அந்த இனமும் அழியாத புகழை அடைய முடியும்" எவ்வளவு உண்மையான வார்த்தைகள். இன்று சீனாவில் அரசியல் மாற்றங்கள் கொஞ்ச கொஞ்சமாக வந்து கொண்டிருக்கின்றன. அவர் கூறிய அந்த வாக்கியத்திற்கான உதாரணமே இந்தியாவும் சீனாவும் தான். என்ன இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான உதாரணங்கள் அவ்வளவுதான்.


இந்தியாவில் வளர்ச்சியே இல்லையா? இந்தியர்கள் எவரும் புத்திசாலிகள் இல்லையா? ஏன் திரு. கோபிநாத் அவர்கள் சொன்னதில் என்ன தவறிருக்கிறது  என்று கண்டிப்பாக கேள்வி எழும்.

இந்தியர்கள் புத்திசாலிகள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை, அதே சமயம் மற்ற தேசத்தவரை குறைத்து மதிப்பிடுதல் தவறு என்று தான் சொல்லவருகிறேன். உதாரணமாக, இந்தியாவிலேயே படித்து, இந்தியாவிலேயே ஆய்வு செய்து நோபெல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன், ஜகதீஷ் சந்திர போஸ், பீர்பால் சாஹ்னி, ப்ரபுல்ல ராய் போன்ற விஞ்ஞானிகள் அனைவரும் போதுமான வசதிகள் இல்லாமல் தான் உலக தரம் வாய்ந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அறிவியல் அறிஞரும், அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள விஷயங்களை மைய்ய ஆய்வாக எடுத்துக்கொண்டனர். ராமன் அவர்கள் அதிகநேரம் சூரிய ஒலி பெறும் இடத்தில்  பிறந்து, சிதறும் ஒலி அலைநீள மாற்றத்தை பற்றி ஆய்வுசெய்தார். அதிகமான சுந்தரவன காடுகள் சூழ்ந்த பிரதேசத்தில் பிறந்த பீர்பால் சாஹ்னி, செடிகளுக்கு நடுவே நடக்கும் தொடர்புகளை பற்றி ஆய்வுசெய்து புரட்சிகரமான கருத்துகளை முன்மொழிந்தார்.  இப்படி இந்தியாவில் எத்தனையோ அறிவியல் மேதைகள் தோன்றி மறைந்தனர். ஆங்கிலேய ஆட்சியிலேயே இப்படி செய்யமுடியுமானால், இந்தியா ஒரு வல்லரசு அல்லது வல்லரசு ஆக போகிற நாடென்றால் எத்தனை தூரம் நம் முன்னேற்றம்  இருந்திருக்க வேண்டும், ஏன் இல்லை என்று மாணவர்களை கேள்வி எழுப்ப வைத்து அதற்கான பதிலையும் சொல்லி, மாற்றத்தினை உருவாக்குங்கள் என்று பேசியிருக்க வேண்டுமென்று தான் சொல்கிறேன்.

இந்த சொற்பொழிவுகளில் திரு. கோபிநாத் அவர்களை ஒரு விஷயத்துக்காக பாராட்ட வேண்டுமென்றால், அது அவர் மாணவர்களை இந்திய பொருளாதாரத்தினையும், அரசியலமைப்பையும் படிக்க சொன்னதற்காக பாராட்டவேண்டும்  மாணவர்களை பொதுவான விஷயங்களை படிக்க தூண்டுவது என்பது ஒன்றே நம் தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உபயோகமாக இருக்கும். ஆனால் இந்திய பொருளாதாரத்தினை, அரசியலமைப்பு சட்டத்தினை படித்து ஏன், எதற்கு எப்படி என்று கேள்வி எழுப்பாமல் இருக்கும் பலர் போல் அல்லாமல் ஓவ்வொரு விஷயத்தையும் கேள்வி கேளுங்கள், மாற்றங்களை உருவாக்குங்கள் என்று சொல்லியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
அவர் சொல்ல வந்த நோக்கம் சரி ஆனால் சொல்ல பயன்படுத்திய கருத்துக்கள் தான் தவறானவையாக தோன்றுகிறது. நமது மாணவர்களின் தாழ்வுணர்ச்சியை தகர்க்க வேண்டும் என்ற நோக்கம் தான் அவர் பேச்சில் உள்ளது ஆனால் அதற்காக மற்ற நாட்டினரை முட்டாள்கள் போல் சித்தரிப்பது தவறு. நமது தேசத்தின் உண்மையான வலிமையை பற்றி பேசி இருக்க வேண்டும், மேலைநாட்டினர் ஏன் இன்றும் நம் முதலாளிகளாக இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். சரித்திரத்தில் அனைத்து நாடுகளும் ஆவலோடு தேடிய தேசம் இந்தியா, பின் எங்கே நாம் தவறினோம், எங்கே அவர்கள் முன்னேறினார்கள் என்று விளக்கமாக பேசி இருக்க வேண்டும். அதற்கு அவரும் விசாலமான வாசிப்பு திறனோடு இருக்கவேண்டும். எந்த விஷயமும் ஆழ்ந்த வாசிப்பு திறம் இருந்தால் ஒழிய, அதுனுடைய அடிப்படையை புரிந்து கொள்வதென்பது கடினம். இளைஞர்களுக்கு எழுச்சி உரைபோல் இருக்க வேண்டுமென்று அவர் பேசியிருக்கலாம். ஆனால் அந்த எழுச்சி உரையை வெறும் சினிமாவில் வருகின்ற வசனம்போலல்லாமல், கருத்தாழமிக்க, சிந்தனைகளை தூண்டகூடிய உண்மையான கருத்துக்களை கொண்டனவாக இருப்பது தான் இன்றைய சூழ்நிலையில் இந்திய இளைஞர்களின் தேவை. இன்றைய சமூகத்தில் திரு.கோபிநாத் அவர்களை மக்கள் ஒரு Intellectual என்று பார்க்கிறார்கள், அத்தகைய பார்வையினாலே தான் இன்றும் பல கல்லூரிகளில் அவரை பேச அழைக்கின்றனர். எதிர்கால இந்தியாவை பற்றி நிறைய பேசும் அவர், அந்த எதிர்கால இந்தியாவின் இளைஞர்களை  தவறான கருத்துக்களின் பின்னல் உணர்ச்சிகொள்ள செய்யவைக்க மட்டுமே பேசுவது போல் உள்ளது தவறு என்பதே என்னுடைய எண்ணம்.