வெள்ளி, 21 டிசம்பர், 2012

நீயா நானா கோபிநாத்தின் கல்லூரி சொற்பொழிவுகள் பகுதி - 1





நம் மக்கள் பல சமயம் நாட்டைபற்றி பேசும்போது இருவேறான கருத்துக்களோடு தான் சிந்திப்பார்கள். ஒன்று. நாம் தான் உலகிலேயே புத்திசாலிகள், நமது மூளை தான் எங்கும் உபயோகப்படுகிறது என்று பேசுவார்கள் அல்லது அதற்கு நேர்மாறாக வெள்ளைகாரனே சொல்லிட்டான், அவனுக்கு தெரியாததா நமக்கு தெரியபோகுது என்று பேசுவதை பல இடங்களில் கேட்டிருப்போம் கிட்ட திட்ட இதே ரீதியில் நீயா!! நானா!! திரு.கோபிநாத் அவர்கள் பல கல்லூரிகளில் பேசியதை நான் கடந்த சில நாட்களாக Youtubeல் பார்த்தேன்( மேலே உள்ள படங்களில் அவருடைய பேச்சுக்களை  கேட்கலாம்), எல்லா கல்லூரிகளிலும் அவர் மாணவர்களையே Topic சொல்ல சொல்லி கேட்டாலும் பெரும்பாலான கேள்விகள் இந்தியா, எதிர்கால இந்திய இளைஞர்கள் என்றே இருப்பதால் அவர் ஒரே பாணி பேச்சையே, ஒரே கருத்தினையே பல இடங்களில் பேசி வருகிறார். அவர் சொல்லும் கருத்துக்களை பற்றி சிந்தித்த பொழுது, அவர் கூறும் சில விஷயங்களில் சரியான தெளிவு இல்லை என்று தோன்றியது. அது மட்டும் அல்லாது நிறைய இடங்களில் தவறான தகவல்களை கூறுவதாகவும் தோன்றியது, அதுவே இன்று நம் மக்கள் பலருடைய எண்ணமும் என்பதனால் அந்த கருத்துகளை பற்றி மேலும் விபரமாக எழுதலாமென்று நினைத்தேன். எனக்கு திரு. கோபிநாத் அவர்களின் மீது தனிப்பட்ட விரோதமோ கோவமோ கிடையாது, அவருடைய கருத்துக்களில் உள்ள தவறுகளையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவற்றை இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளேன்,   முதல் பகுதியில் 1 முதல் 6  கருத்துக்கான பதில்களும் இரண்டாம் பகுதியில் 7 முதல் 14 வரையிலான கருத்துக்களின் மறுமொழிகளும் உள்ளது.

கருத்து 1: தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 75000 பொறியாளர்கள், மொத்த அமெரிக்காவில் 75000 பொறியாளர்கள்

இதை கேட்கும் பொழுது, ஆஹா இந்தியாவின் ஒரு மாநிலம் அமெரிக்கா என்ற மொத்த தேசத்தின் பொறியாளர் கணக்கினை சமன் செய்கிறது என்றால், மொத்த இந்தியாவும் எத்தனை ஆயிரம் பொறியாளர்களை உருவாக்கும் என்று வியந்து நிற்போம். ஆனால் அமெரிக்காவின் வெறும் 75000 பொறியாளர்களின் கல்வி தரத்தினையும் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் 75000 பொறியாளர்களின் கல்வி தரத்தினையும் ஆராய்ந்து பார்த்தால் அதிகமான வித்தியாசங்கள் தெரியும். மாநிலத்தை விடுங்கள், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்லூரியான காரக்பூர் IIT யையும் அமெரிக்காவின் MIT யையும் ஒப்பிட்டு பார்த்தாலே வித்தியாசம் தெரியுமே. பொறியாளர்களின் எண்ணிக்கையை பார்க்காமல் அவர்களின் திறன்களை பார்த்து தானே ஒப்பீடு செய்ய முடியும்? அடிப்படையிலிருந்தே சொல்கிறேனே, நாம் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் மேற்படிப்பு திறன்களை ஆழ்ந்து பார்க்கும்பொழுது முக்கியமான விஷயம் ஒன்று புலப்படும்.  அது அவர்கள் மாணவர்களை சேர்க்கும் விதம், இளங்கலை அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர அவர்களுக்கு SAT , CBAT போன்ற தகுதி தேர்வுகள் இருப்பினும், அம்மாணவர்கள் ஏன் அத்துறையை தேர்வு செய்கிறார்கள், அவர்களின் பள்ளி படிப்பு காலங்களில் பொறியியல் படிக்க ஊக்கப்படுத்திய தருணங்கள் ஆகியவற்றை பற்றிய விரிவானதொரு Statement of Purpose (SOP) தர வேண்டியிருக்கும். பல சமயங்களில் அவர்களின் தகுதி தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தாலும், SOPயின் வாயிலாக  அவர்களின் ஆர்வத்திற்கு மதிப்பளித்து இடம் கொடுக்கபடுவதுமுண்டு. இது எல்லா பல்கலைகழங்கங்களிலும் நடக்கின்றது என்று சொல்லவில்லை, ஆனால் பல தலைசிறந்த பல்கலைகழகங்களில் இவ்வாறு நடப்பதுண்டு.
இதுவே நம் இந்திய தேசத்தின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் முதலில் நினைவுக்கு வருவது IIT தான். IIT போன்ற கல்வி நிலையங்களுக்கான தகுதி தேர்வுகளில் வெற்றி பெற நமது மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலிருந்து நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அவ்வாறு பெற்ற பயிற்சியில் தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து இடமளிக்கபடுகிறது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் எவ்வளவு பேர் உண்மையான ஆர்வத்தினால் தொழில் நுட்பம் கற்கின்றனர் என்பது கேள்வி குறி. பலரும் Peer Pressure  அல்லது பெற்றோரின் விருப்பத்துகாகவே தேர்வெழுதி வெற்றி பெறுகின்றனர்.
 ஆர்வமே பல ஆராய்ச்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் வித்தாக அமைகின்றன, ஆனால் நம் நாட்டின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் கூட ஆர்வத்திற்கு போதுமான அளவு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த நூற்றாண்டில் தான் அறிவியல் வளர்ச்சி என்பது பல வழிகளிலும் ஓங்கி வளர்ந்துக்கொண்டு வருகிறது. இவ்வாறிருக்க மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் மேற்கொள்ளாத பொறியியல் படிப்புகளிலிருந்து நமக்கு கிடைக்கும் பல பொறியாளர்கள் சேவை சார்ந்த தொழில்நுட்ப வேலைகளில் மேலைநாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்வதை தவிர வேறு வழியில்லை. நாம் நமது அடிப்படை கல்வி கொள்கைகளை மாற்றாவிடில் எழுவத்தைந்தாயிரம் அல்ல  ஏழு லட்சம் பேர் வந்தாலும் பெரிய புரட்சியெல்லாம் நடந்துவிடாது. நம்முடைய பொறியாளர்கள் வெகு சிலர் வேண்டுமானால் சாதனை படைக்கலாம், 99.99999 சதவிகிதத்தினர் வெறும் பொறியாளர் என்று திருமண பத்திரிகையில் போட்டுகொள்ளவும் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களின் பொட்டிதட்டும் வேலையில் சேருவதற்கும் உதவுமே தவிர வேறு எதற்கும் அந்த ஏட்டு சுரக்காய் உதவாது.

கருத்து 2:  இந்த கல்லூரி Correspondent, இந்தியாவின் முன்னால் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து கல்வி என்ற தீபந்தத்தை இன்றைய இளைய தலைமுறையிடம் கொடுத்துள்ளனர்

இன்றைய தேதியில் தமிழ் நாட்டில் 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன, கடந்த 15 வருடத்தில் மட்டும் ஒரே ஒரு மாநிலத்தில் இவ்வளவு பொறியியல் கல்லூரிகள், இவை எல்லாமே தேவையான கட்டமைப்புகள் எல்லாம் கொண்டனவா?,  நாம் தூற்றும் மற்ற நாடுகள் பலவற்றிலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமல் கல்லூரிகள் தொடங்க அனுமதி தரப்படுவதில்லை, இத்தனை கல்லூரிகளின் நிறுவனர்களுக்கும் ஏதோ கல்லூரி தொடங்கி இளைய தலைமுறையினரை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றே வைத்துகொள்வோம், பிறகு ஏன் அவர்கள் பொறியியல் கல்வியில் தேவையான மாற்றங்களை உருவாக்கவில்லை?  இன்று பல பொறியியல் கல்லூரிகளில் போதுமான அளவு நூலகங்கள் (தொழில்நுட்ப பிரிவு வாரியாக) கிடையாது அப்படியே இருந்தாலும் பல இடங்களில் போதுமான நூல்கள் கிடையாது, மிஞ்சிபோனால் பொதுவான பாடதிட்டத்துகான நூல்களை அடுக்கி வைத்திருப்பர், அதுவும் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களை தவிர்த்து மற்ற நூல்கள் இருக்காது. கல்வி என்பது பரிந்துரைக்கப்பட்ட புத்தகத்திலிருந்து படித்து மதிப்பெண் பெறும் வேலையல்ல, மாறாக பல புதிய அறிவார்ந்த சிந்தனைகளை உருவாக்க பயன்படும் உத்தி. இதை தான் உலகில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் முதல் இடத்தில் இருக்கும் MITயின் (Massachusetts Institute of Technology) கல்லூரி தகவல் புத்தகத்தில் "கல்வி என்பது பாத்திரத்தினுள் அடைக்கும் பொருளல்ல,நெருப்பு போன்ற அறிவார்ந்த சிந்தனைகளை தூண்டிவிடும் கருவி" என்று கூறுகின்றனர். இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் எத்தனை பொறியியல் கல்லூரிகளின் தாளாளர்கள் இப்படி நினைகின்றனர்? இவ்வளவு ஏன், நம் மாநிலத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் என்று சொல்லப்படும் சில கல்லூரிகளில் "உங்கள் கல்லூரி எப்படி தலைசிறந்த கல்லூரி ஆனது?" என்று கேட்டு பாருங்கள், எல்லோரும் உடனே அறிவார்ந்த சிந்தனைகளை தூண்டும் விதமாக கல்வி கற்பிக்கிறோம் என்றா கூறுவார்கள்? இல்லையே எங்கள் கல்லூரியில் படித்த மாணவர்கள் பல்கலைகழகத்திலேயே சிறந்த மதிப்பேன் பெற்றனர் என்றும் நாங்கள் கல்வியை விட ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போமென்றும் தானே சொல்லுவார்கள், இது தானே நாம் பல தடவை பார்த்திருக்கிறோம். சரி கல்வியில் மாற்றம் செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட கல்வி கட்டணத்தில் ஏன் மாற்றங்கள் செய்யவில்லை?, எடுத்துக்காட்டாக, கல்வி கட்டணத்தினை குறைத்து வாங்கலாம்?  அல்லது பல மாணவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலைகேற்ப கட்டணத்தில் குறைக்கலாம், அதுவும் இல்லையென்றால் management seat என்ற பெயரில் லட்சங்களுக்கு விற்காமல் இருக்கலாம்.  இவை எதுவுமே செய்யாதவர்கள் தான் அடுத்த தலைமுறைக்கு தீபந்தம் கொடுப்பவர்களா? இவர்கள் யாவரும் கல்வி வியாபாரிகளே அன்றி வேறல்ல. இத்தகையோருக்கா திரு. கோபிநாத் சப்பைக்கட்டு கட்டுவது?

கருத்து 3:  உலகத்தின் மிக பெரிய புத்திசாலிகள் இந்திய இளைஞர்களே!!, உலகமே இந்திய மூளையை பார்த்து வியக்கிறது, அமெரிக்காவை இயக்குவதே இந்திய மூளை தான்

நம் மக்கள் பலருக்கும் நாம் தான் பெரிய புத்திசாலிகள் என்ற எண்ணம் உண்டு, நானும் பள்ளிகூட நாட்களில் அப்படி நினைத்து கொண்டதுண்டு, சரி அப்படியே ஒரு பேச்சுக்காக வைத்துகொண்டாலும்,  உலகில் நம்மை தவிர எவருமே புத்திசாலிகள் கிடையாது என்றால் நாமல்லவோ மொத்த உலகத்தையும்  ஆள வேண்டும்,    இன்று உலக நிலைமை அப்படியா இருக்கிறது.  நம்மீது முதலாளித்துவ நாடுகள் திணிக்கும்
பொருளாதார வன்முறைகளை கூட புரிந்தது கொள்ள முடியாத புத்திசாலிகளாக தானே நாம் இருக்கிறோம்.   எதற்கெடுத்தாலும் நம்மிடம் இல்லாததா, நாமெல்லாம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே அரசமைத்து ஆட்சி புரிந்தோம் என்று கூறிகொள்வோம், உலகை இயக்குவதே இந்திய மூளை தான் என்றும் சொல்லுவோம்,இந்திய வம்சாவளியை சேர்த்தவர்கள் எவரேனும் வேறு நாடுகளில் வசித்து ஏதேனும் ஒரு சாதனை புரிந்தால் உடனே சொந்தம் கொண்டாடி மகிழ்வோம். அவர்கள் அச்சாதனை புரிய காரணமாயிருந்த சூழ்நிலைகள் பற்றி யோசிக்கவே மாட்டோம். எனக்கு தெரிந்து மற்ற தேசத்தில் இருக்கும் பலரும் தாங்கள் தான் புத்திசாலிகள் என்று கூறி கொள்வதாக தெரியவில்லை. வருடத்திற்கு குறைந்தது 5 நோபெல் பரிசு பெரும் அறிஞர்களை உருவாக்கும் ஜெர்மானிய தேசம் தம்மை தாமே "நாங்கள் தான் உலகின் புத்திசாலிகள்" என்று சொல்லிக்கொள்வதில்லை, சுதந்திரத்திற்கு பின் அறிவியலில் சொந்தமாக ஒரு நோபெல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞரை கூட உருவாக்க முடியாத தேசம் தான் உலகத்திலே புத்திசாலிகள் உள்ள தேசம் என்றும் மற்ற தேசத்தவர் எல்லாம் எதோ முட்டாள்கள் போல் நாம் நினைத்து கொள்வது எவ்வளவு தவறானது. நோபெல் பரிசு தான் அறிவின் அளவுகோல் என்று சொல்லவரவில்லை, ஆனால் உலக அரங்கில் அரசியல் இல்லாமல் அறிவியல் சார்ந்து கொடுக்கப்படும் ஒரு விருதினை பெற நம் நாட்டில் ஏன் எவரும் இல்லை?  சரி அறிவியலில் வேண்டாம், நாமெல்லாம் பொருளாதார புலிகள் என்றே வைத்துகொள்வோம், இன்று நம்முடைய பொருளாதார வளர்ச்சியை பார்த்து உலகம் மிரளுகிறது என்று சொல்கிறோமே, 2012 ஆம் வருடம் ஐரோப்பாவின் பொருளாதார தொய்வு ஏற்பட்ட சமயம் புத்திசாலிகள் நிறைந்த வலிமைவாய்ந்த நம் தேசம் தனித்து வலிமையாக இருந்ததா? இல்லையே நம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி 9 % த்தில் இருந்து 5 % ஆக குறைந்தது. 2008 உலக பொருளாதார மந்த நிலை வந்த பொழுது நாம்மவர் பலரும் அமெரிக்கர்கள் எல்லாம் ஊதாரிகள் அதனால் பொருளாதார மந்த நிலை வந்தது என்றும், நம்மவர் எல்லாம் சேமிப்பு பழக்கம் உள்ளவர் என்பதால் நம் பொருளாதாரம் சேதமடையாமல் இருந்தது என்று ஏதை பற்றியும் யோசிக்காமல் சொல்ல கேட்டிருக்கிறேன். உண்மை என்னவோ பொருளாதார மந்தநிலை அமெரிக்காவை தாக்கினாலும் ஐரோப்பாவை தாக்க நேரமாகியது அந்த காலகட்டத்தில் இந்திய பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கும் சேவை துறையின் வியாபார பின்னல்கள் வெறும் அமெரிக்காவை மட்டும் சாராமல் ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளோடும் தொடர்பு கொண்டிருந்தன. சிறிது காலத்திற்கு பின் அமெரிக்காவின் Federal Reserve வங்கி சரிந்த பல நிறுவனங்களை கைதூக்கி விட்டது, அதற்காக சீனாவிடம் அமெரிக்கா கடன் வாங்கியது, இதனால் அமெரிக்காவின்  கடன் ஒரு ட்ரில்லியன்  டாலர்கள் கூடுதலாக உயர்ந்தது. இந்த காலத்திற்கு பிறகு அமெரிக்காவின் பொருளாதாரம் ஓர் அளவு சீரடைந்தது, ஆனால் முழுமையாக சீரடையவில்லை, அதன் பின்  கொஞ்சம்  கொஞ்சமாக  உலக  அளவில் பதிப்பை ஏற்படுத்தியது, அந்த சமயத்தில் அமெரிக்க ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் பலர்  ஆசிய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது என்று கூறினர், அதற்கெல்லாம் நாம் நினைத்து கொண்ட அர்த்தம் இந்திய பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் சீனாவினை மனதில் வைத்து சொன்னார்கள். பெதுவாக கூறப்படும் ஆசிய பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு கடனும் கொடுத்து எவரிடமும் கடன் வாங்காமல் இருக்கும் சீனாவை ஒப்பிடும் பொது  நம்முடைய பங்கு சொற்ப சதவிகிதமே ஆகும்.   கடந்த இரண்டாண்டுகளாக நிகழ்ந்து வரும் பொருளாதார சரிவுக்கு 2008 ஆம் ஆண்டு  ஆரம்பித்த பொருளாதார சீர்குலைவே காரணமாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.  அன்று சேமிப்பில் சிறந்து உலகமே உய்ய   காரணமான  நாம் பின் ஏன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சரியும் பொருளாதரத்தை தூக்கி நிறுத்த முடியாமல் தவிக்கிறோம்,  தொடர்ச்சியான பண வீக்கம், விலைவாசி உயர்வு இவை எதையுமே குறைக்க நம்மால் முடியவில்லையே,   பின் எதற்கு நம்மை நம்பி தான் உலகமே இருக்கிறது என்ற வீண் ஜம்பம் பேச வேண்டும்.

கருத்து 4:  Pentagonல் பேசியிருக்கிறேன், எல்லாம் இந்தியர்களின் மூளை தான்

பென்டகனில் பேசியபோது எல்லாம் இந்தியர்களின் மூளை என்று கேட்டபொழுது மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் அவர் கூறியதில் ஒரு பகுதி உண்மையாக இருக்கலாம், என்னென்றால் இன்றைய சூழ்நிலையில் பென்டகனின் நிதி நிர்வாக மென்பொருள்கள் தொழில்நுட்பத்திற்கு H1 விசாவில் பல இந்தியர்கள் வேலை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். இதை தவிர்த்து பார்த்தோமானால், பென்டகன் என்பது அமெரிக்க நாட்டின் ராணுவ தலைமையகம், பல முக்கிய ராணுவ முடிவுகளை எடுக்குமிடம். அங்கே நிதி நிர்வாகத்தில் வேலை என்று சொன்னால், அங்கே வேலை செய்யும் பலருக்கும் சம்பள பட்டுவாடா முறையினை மென்பொருள் கொண்டு செயல்படுத்தும் துறையில் தான் வெளிநாட்டவர்களை அனுமதிக்கிறார்களே அன்றி அவர்களின் முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் பலரை பாதுகாப்பு காரணங்களினால் பயன்படுத்துவதில்லை. ராணுவ நிதி பட்டுவாடா மற்றும் செலவீனங்களுக்கான நிர்வாகத்திற்கு கூட வெளிநாட்டு மென்பொருள் பொறியாளர்களை உபயோகப்படுத்துவதில்லை என்று WNYC என்ற நியூ யார்க் நகர மக்கள் வானொலியில் கேட்டிருக்கிறேன். நம்முடைய பொறியாளர்கள் வெறும் நிதி சார்ந்த மென்பொருளினை கையாண்டால் அதற்கு அர்த்தம் அமெரிக்காவின் பென்டகனே நம் இந்திய மூளைகளை நம்பி தான் என்றில்லையே. பென்டகனில் எடுத்த பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்த்தந்திர முடிவுகள், தொழில்நுட்ப்ப விரிவாக்கல்கள் இவற்றில் எத்தனை இந்திய மூளைகள் பங்கேற்றன? சமீபத்தில் விக்ரம் சிங் என்ற அமெரிக்காவில் பிறந்த இந்தியர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ராணுவ விவகார துறையின் முக்கிய அதிகாரியாக பொறுப்பேற்றார், அவர் இந்திய வம்சாவளி என்றாலும் அவர் பிறப்பால் ஒரு அமெரிக்கரே. இவரை நாம் இந்திய மூளை என்று சொல்லிக்கொண்டு, இதோ பென்டகனே இந்திய மூளையினால் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறதென்று என்று சொல்லிகொண்டாலும் ஆச்சர்யபடுவதற்க்கில்லை

கருத்து 5: இந்திய பொறியாளருக்கும், அமெரிக்க பொறியாளருக்கும் உள்ள வித்தியாசம் - இருவருக்கும் பச்சை சுவிட்சை போட்டால் என்ஜின் ஓடும் சிவப்பு சுவிட்சை போட்டால் என்ஜின் நிற்கும் என்று சொல்லி வைப்போம், ஒரு வேலை பச்சை சுவிட்ச் போட்டு என்ஜின் ஓடவில்லையன்றால், அமெரிக்காவின் பொறியாளர் பச்சை சுவிட்ச் போட்டேன் வேலை செய்யவில்லை என்று எழுதி வைத்து விட்டு வந்து விடுவான், இந்தியாவின் பொறியாளர் அக்குவேறு ஆணிவேராக பிரித்து பழுது பார்த்துவிடுவான்

 இப்படி ஒரு கருத்தை கேட்டபோது என் அலுவலகத்தில் நிகழ்ந்த விஷயமொன்று ஞாபகம் வந்தது, பல முறை எங்கள் அலுவலகத்தில் அச்சு எந்திரம் வேலை செய்யாது, உடனே அலுவலக நிர்வாக துறையிடம் தெரிவித்தால், 15 நிமிடத்தில் தொழில்நுட்பவியலரை அனுப்பி சரி செய்தது விடுவார்கள். ஆனால் சில சமயங்களில் நம்மவர் பலர் (ஏனென்றால் எங்கள் அலுவலகத்தில் 100 க்கு 80 சதவிகிதம் பேர் இந்தியர்கள்) இப்படி அக்குவேறு ஆணிவேராக கலட்டி மீண்டும் சரி செய்ய தெரியாமல் ஏகப்பட்ட செலவு வைத்துவிடுவார்கள். இதற்காகவே எங்கள் அலுவலகத்தின் அச்சு எந்திரங்களின் மீது ஒரு தகவல் அறிக்கை ஒட்டி வைத்தனர், அதன் படி இனி எந்த எந்திர கோளாறு என்றாலும் தயவு செய்து எவரும் கைவைக்காமல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இது அமெரிக்காவில் மட்டுமல்ல நான் இந்தியாவில் வேலை செய்தபோதும் எங்களுடைய நிறுவனத்தின் வன்பொருள் பொறியாளர்கள் பலர் புலம்பி கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் நம்மவர் பலர் இது போன்ற செயல்களை தாங்கள் வேறு ஒரு இடத்தில் இவ்வாறு நடந்தபோது சரிசெய்தோமே, இதையும் தான் பார்த்துவிடுவோம் என்று நினைக்கின்றனர். இந்தியர்கள் பலரும் இது தாங்கள் எந்த சிக்கல்களை கொடுத்தாலும் சரிசெய்வோம் என்பதற்கான உதாரணம் என்று நினைக்கின்றனர். உண்மையில் இப்படியான சூழ்நிலையில் ஏன் நம்மவரும் ஒரு அமெரிக்கரும் வேறு வேறாக நடந்துகொள்கின்றனர் என்று சிந்திப்போமானால் அதற்கு முதல் காரணம் நமது தேசத்தில் பல இடங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தான் அந்தந்த வேலைகளை செய்வார்கள் என்றில்லை. அப்படியே நாம் நிபுணர்களை அழைத்தாலும், போதுமான அளவு விஷய அறிவு இல்லாதவர்களே நிபுணர்களாக நடிக்கின்றனர். இப்படியே பார்த்து பார்த்து இந்தியர்கள் பலரும் இது போன்ற சிறு சிறு தொழில்நுட்பப கோளாறுகளை தாங்களே சரிசெய்துவிடலாம் என்றெண்ணி முழுவதுமாக காலி செய்துவிடுகின்றனர். இன்னும் சொல்லபோனால் நம் தேச சூழ்நிலையும் ஒரு காரணம் நமது தேசத்தில் பச்சை சுட்சை போட்டால் ஓடும் என்று சொன்னால், பல சமயம் பச்சை சுட்சை போட்டால் ஓடாது,  ஆடி அசைத்து இழுத்து பிடித்து கொண்டு ஓட்டியே பழக்கப்பட்டுவிட்டோம். இதே மேலை நாடுகளில் 100 க்கு 90 சதவிகிதம் பச்சை சுட்சை போட்டால் ஓடுமென்றால், அது கண்டிப்பாக ஓடும். அப்படி இல்லையென்றால் அவன் தனது அடுத்த வேலையை செய்ய போய்விடுவான், அதே சமயம் தேவையான துறையினருக்கு தகவலும் கொடுத்துவிட்டு, தனக்கு பின் வரும் நபர் வேலை செய்யாத எந்திரத்தை இயக்க தேவையில்லாமல் முயற்சிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில் ஒரு சின்ன சீட்டு எழுதி ஓட்டி சென்றுவிடுவார். சிறிது நேரத்தில் அந்த துறையினர் வந்து எந்திரத்தை சரிசெய்து உடனே எந்திரம் இயக்க நிலைக்கு வந்துவிடும். நிபுனத்துவமில்லாமல் அந்த மேலை நாட்டு பொறியாளர் ஒன்றும் நேரத்தை விரயமாக்கி கொண்டு நான் கலட்டி மாட்டிவிடுவேன் என்று நினைக்கவில்லை என்பது உண்மையில் சிறந்த நெறிபடுத்தப்பட்ட வேலை பண்புகளை தானே காட்டுகிறது? இதுவே இப்படி நம் நாட்டில் செய்தால், தக்க துறையினர் வந்து சரி செய்யவே பல நாட்கள் ஆகிவிடும். ஆகவே நம்மவர் பலரும் போதுமான நிபுணத்துவமில்லாமல் சிறு சிறு பிரச்சனைகளை தாங்களே சரிசெய்ய முயற்சிக்கின்றனர். சில சமயங்களில் முடிகிறது, சில சமயங்களில் பிரச்சனை பெரிதாகி செலவு வைத்து விடும், இன்னும் சில சமயங்களில் விபத்துக்களை கூட ஏற்படுத்திவிடும். எனவே ஒரு அமெரிக்க பொறியாளருக்கும் இந்திய பொறியாளருக்கும் வேலைசெய்யாத சுவிட்சை கொடுத்தால், அவர்கள் செய்யும் செயல்களுக்கு இவையே உண்மையான காரணம். இதை தெளிவாக சொல்லி, வருங்கால இந்திய பொறியாளர்களாவது தத்தம் துறைகளில் வேலைக்கு சேருமுன் போதுமான அளவு நிபுணத்துவம் கொள்ளவேண்டும், மேலை நாடுகளை போல் தமது கடமைகளை நேரதாமதமின்றி செய்யவேண்டும், மற்றும் வேலையினை நெறிபடுத்தி செயல்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினால் தானே நாளை நமது தேசம் வளர்ந்த தேசமாக, நமது அடுத்த சமுதாயமாவது ஓட்டை சுட்சுகளை விடுத்து தரமான சுட்சுகள் உள்ள நாடாக விளங்கும்?

கருத்து 6:  ஏன் இத்தனை பொறியாளர்கள் இருந்தும் ஒரு திறமான product கூட செய்யமுடியவில்லை, இந்த கேமரா உங்களுடையதா?? இந்த மைக் உங்களுடையதா?? ஒரு பேனா உங்களுடைய உருவாக்கமா?? இதை பற்றி சிந்தித்த மூளை இந்திய மூளை செய்த வியர்வை, செய்த ரத்தம் இந்தியனுடையது ஆனால் product வேறொருவனுடையது

இன்றைய உலகில் பல productகளை செய்த, செய்யும் வியர்வையும் ரத்தமும் சீனனுடையதும், இந்தியனுடையதும் தான். ஏனென்றால் இந்த மூன்றாம் உலக நாடுகளில் தான் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் தொழிலாளர் நல சட்ட திட்டங்கள் மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன, அதனால் பல மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய, சீனா போன்ற நாடுகளில் தங்கள் தொழிற்கூடங்களை அமைத்து குறைந்த பாதுகாப்பு, குறைந்த சம்பளம், குறைந்த தொழிலாளர் வசதிகள், அதிக வேலை நேரம், அதிக வேலை பளு கொண்டு அதிக லாபம் பெறுகின்றனர். சீனாவில் தொழிலாளர் நலம், மக்கள் நலம் ஆகியவை முன்னை காட்டிலும் பரவாயில்லை என்று சொல்லலாம், ஆனால் இந்தியாவை பொறுத்த வரை எங்கும் எதிலும் காசுகொடுத்தால் எதையும் செய்யலாம் என்ற பொது விதி உள்ளதால், எந்த தொந்தரவுமின்றி மேற்க்கத்திய நிறுவனங்கள் சத்தமில்லாமல் நம் மக்களின் அறியாமையும் வறுமையையும் உபயோகப்படுத்திக்கொள்கிறது. இதில் அறியாமை என்பது ஏதோ படித்து பட்டம் வாங்காதவர்களை குறிக்கிறது என்று எண்ண வேண்டாம், முதலாளித்துவ நிறுவனங்கள் ஏன் விரும்பி நம் தேசத்தில் உற்பத்தி பிரிவுகளை துவக்குகின்றன என்று புரிந்து கொள்ளாமல் இருக்கும் நம் அனைவரையும் குறிக்கிறது.
சரி, சில நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி துறையினை இந்தியாவில் நிறுவியுள்ளனரே, அப்படி என்றால் இந்தியர்களின் மூளை தானே இத்தனை பொருட்களையும் வடிவமைக்கிறது என்று கேட்கலாம். INTEL, மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகிள், GE இன்னும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் R & D எனப்படும் தொடர் ஆய்வு மற்றும் வளர்ச்சி நிலையங்களை இந்தியாவில் அமைத்துள்ளன. இங்கே என்ன ஆய்வுகள் மேற்கொள்கின்றனர் என்று பார்த்தால், அடிப்படை ஆய்வுகள் அல்லாமல் சிறு சிறு மாற்றங்கள் குறித்த ஆய்வுகள், இந்தியாவிர்க்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்கள், அமைப்புகள் ஆகியவையே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் என்ன ஆய்வு கூடங்கள் அமைக்க இந்தியாவை தேடி வருகின்றனரே என்று வாதிடலாம், உண்மையில் அடிப்படை ஆய்வுகளை செய்வது என்னவோ அமெரிக்க, ஐரோப்பா, சீனா, ஜப்பான் மற்றும் சில கிழக்காசிய நாடுகளில் உள்ள ஆய்வு கூடங்களில் தான். இந்நிறுவனங்களில் அடிப்படை ஆய்வு என்றால் என்ன என்று கேட்டால், ஆப்பிள் நிறுவனத்தினை எடுத்து கொள்ளுங்கள், முதல் தொடு விசை பலகைகளை (Touch screen) தயாரிப்பதற்கான ஆய்வுகளை தங்களின் அமெரிக்க ஆய்வு கூடங்களில் தான் செய்தனர், அதற்கு தென் கலிபோர்னியா பல்கலைக்கழகமும் துணை புரிந்ததாக கேள்வி. கூகிள் நிறுவனத்தின் தானியங்கி Google Car கலிபோர்னியாவிலுள்ள ஆய்வு கூடத்தில் தான் முழு ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது, இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தலைசிறந்த முதல் பத்து product கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்டெல் நிறுவனத்தின் processorகள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டாலும், அவற்றின் குறைந்த மின் சக்தியில், நானோ மில்லி மீட்டர் அளவில் மிக சக்திவாய்ந்த processorகளை உருவாக்கும் ஆய்வுகள் இன்றும் இந்தியாவில் நடைபெறுவதில்லை. சுருக்கமாக சொல்வதானால் நம் நாட்டில் அமைத்துள்ள ஆய்வு கூடங்கள் அனைத்திலும் enhancements செய்கின்றனரே தவிர புதிய, புரட்சிகரமான ஆய்வுகளை அந்நிறுவனங்கள் செய்யவில்லை. ஆனால் நாமோ என்ன ஏதென்று தெரியாமல்...ஆஹா இந்தியாவில் ஆய்வு கூடங்கள் ஏற்படுத்திவிட்டனரா, அப்படி என்றால் நாம் தான் இனி உலகத்தில் புத்திசாலிகள் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.
TATA நிறுவனத்தின் TFIR (TATA Institute of Fundamental Research) IIScயின் ஆய்வு கூடங்கள் மட்டுமே, இந்தியாவில் உலக தரம் வாய்ந்த அடிப்படை ஆய்வுகளை செய்யும் தகுதி பெற்றவை. இதில் TATA நிறுவனத்தின் ஆய்வு கூடம் ஒரு இந்திய நிறுவனத்தின் சமூக சிந்தனைக்கு சான்று, அது ஆரம்பித்தே இப்பொழுது நாற்பது வருடங்கள் முடிந்துவிட்டன வேறு எந்த இந்திய நிறுவனங்களும் அதற்கு பிறகு அத்தகைய சமூக சிந்தனையை கொண்டிருக்கவில்லை.
தனியார் நிறுவனங்களை விட்டுவிடுவோம், நமது பல்கலைகழகங்களாவது அடிப்படை ஆய்வுகளை ஊக்குவிக்கிறதா என்றால், அதன் நிலையோ இன்னும் பாதாளத்தில் உள்ளது கடந்த 2003 வருடம் வரை மொத்த தமிழகத்தில், ஒரு electron microscope கூட கிடையாது, பின் எப்படி நமது பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகளை செய்ய முடியும்? இன்றும் மொத்தமாக தமிழகத்தில் ஓர் இலக்க எண்ணிக்கையிலேயே electron microscopeகள் உள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் படித்திருக்கிறேன்.

அதே பத்திரிகையில் ஒரு செய்தியில், சமீப காலமாக இந்திய, பிரேசில், சீனா ஆகிய நாடுகளில் தான் அறிவியல் ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது என்றும், அமெரிக்காவில் அதற்கான ஒதுக்கீடுகள் குறைந்துள்ளன மேலும் இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்க விஞ்ஞான ஆய்வுகளில் தேக்கநிலை ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சீனா சென்ற ஆண்டு அதன் மொத்த GDPயில் 2.5 % நிதியை அறிவியல் ஆய்வு துறைகளுக்காக ஒதுக்கி உள்ளதென்றும் 1999 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சராசரியாக 20% உயர்த்திக்கொண்டே வந்துள்ளது என்றும் இதே போல் இந்தியாவும் ஒதுக்கி உள்ளது என்று மட்டும் மேம்போக்காக கூறியுள்ளது. இதை மேம்போக்காக படித்தால், ஆஹா அன்றே கோபிநாத் சொன்னார் ..இதோ பார் அதற்கான ஆதாரமே உள்ளது  என்று தோன்றும். உண்மை என்னவென்றால், இந்தியா கடந்த 12 வருடங்களாக, அறிவியல் ஆய்வுகளுக்கு ஒதுக்கும் 0.89% நிதியை உயர்த்தவேயில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் சீனாவின் GDP 7,298,147 இந்தியாவின் GDP 1,826,811 . சீனாவை போலவே பிரேசிலும் GDPயில் 2.5 % ஒதுக்கியுள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், BRICS என்று அழைக்கப்படும் நாடுகளில் அநேகமாக இந்தியாவை தவிர எல்லா நாடுகளும் அறிவியல் ஆய்வுகளை வெகுவாக ஊக்குவிக்கின்றன. அவர்களின் GDPயும் வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் உலக வங்கியின் தனி நபர் வருமான அளவீடுகளை பார்க்கும்போது, இந்தியாவிற்கு 141 இடம் தான் கிடைத்துள்ளது BRICS நாடுகளின் அமைப்பில் இந்தியாவிற்கு தான் கடைசி இடம். சீனா கூட 91 இடத்தில் உள்ளது. பின் ஏன் இந்தியாவில் மேற்குலக நாடுகளின் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்கமாட்டார்கள்? இன்று இந்தியா ஒரு Crony - Capitalist நாடு, அதாவது ஊழல் மலிந்த, அரசியல் நிர்வாக ஸ்திரம் இல்லாத முதலாளித்துவ நாடு. இங்கே எதை வேண்டுமானாலும் செய்யலாம் பணம் இருந்தால் போதும். இவையெல்லாம் தான் மேற்க்கத்திய நிறுவனங்கள் போட்டி போட்டு இந்திய வேர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சுவதற்கு வளமான களமமைத்து கொடுக்கின்றன, எனினும் நம்மால் சொந்தமாக எந்த தரமான Productகளையும்  உருவாக்க முடியவில்லை...

தொடரும்.....